புதுடில்லி-”சினிமாவில் துணை நடிகராகவோ, நடிகையாகவோ நடித்துவிட்டு மீண்டும் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பது கடினம்,” என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் நேற்று பேசியது உறுப்பினர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
பா.ஜ.,வை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்யசபாவில் கேள்விக்கு பதில் அளித்து நேற்று பேசியதாவது:’அக்., 1 முதல், வாகனங்களில் ஆறு, ‘ஏர் பேக்குகள்’ கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும்’ என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணியரின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஐந்து லட்சம் சாலை விபத்துகள் நடக்கின்றன. இதில் 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 2020ல் மட்டும் சாலை விபத்தில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ‘ஏர் பேக்குகள்’ இருந்திருந்தால் 30 சதவீத உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பா.ஜ., – எம்.பி.,யும், நடிகையுமான ரூபா கங்குலி, ”புதிய கார்களில் பொருத்தப்படும் தொழில்நுட்பங்களை, பழைய கார்களிலும் பொருத்த முடியும் அல்லவா,” என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த கட்கரி, ”யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக எண்ண வேண்டாம். ”சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடித்தவர்கள், துணை நடிகர்களாக நடித்த பின் மீண்டும் ஹீரோ, ஹீரோயினாக நடிப்பது கடினம்,” என்றார்.
இவரது பதிலால் ராஜ்யசபாவில் சிரிப்பலை எழுந்தது. அமைச்சர் நிதின் கட்கரி, பசுமை ஹைட்ரஜனால் இயங்கும் மின்சார காரில் நேற்று பார்லி., வந்தார். ”பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விரைவில் உருவாகும்,” என, செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
Advertisement