தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், 44 தி.மு.க வேட்பாளர்களும், 6 அ.தி.மு.க வேட்பாளர்களும், 3 காங்கிரஸ் வேட்பாளர்களும், சி.பி.எம், சி.பி.ஐ, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு வார்டிலும், 4 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மறைமுகத் தேர்தலில், 20-வது வார்டு கவுன்சிலரான ஜெகன் மேயராகவும், 46-வது வார்டு கவுன்சிலரான ஜெனிட்டா துணை மேயராகவும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.பெரியசாமியின் மகனும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனின் உடன்பிறந்த சகோதரர்தான் மேயர் ஜெகன்.
இந்த நிலையில், தி.மு.க தலைமையால் வெளியிடப்பட்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மண்டலக்குழுக்களின் தலைவர்களின் பட்டியலில் வடக்கு மண்டலத் தலைவராக 7-வது வார்டு கவுன்சிலரான நிர்மல்ராஜ், கிழக்கு மண்டலத் தலைவராக 29-வது வார்டு கவுன்சிலரான கலைச்செல்வி, மேற்கு மண்டலத் தலைவராக 32-வது வார்டு கவுன்சிலரான கனகராஜ், தெற்கு மண்டலத் தலைவராக 56-வது வார்டு உறுப்பினரான சுயம்பு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். ஆனால், அமைச்சர் கீதாஜீவனின் தலையீட்டால் மேற்கு மண்டலத் தலைவராக 42-வது வார்டு கவுன்சிலரான அன்னலெட்சுமி பரிந்துரைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல, வடக்கு, கிழக்கு மண்டலத் தலைவர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இதில் தெற்கு மண்டலத் தலைவர் பதவிக்கு போட்டி நிலவியது. தலைமையால் அறிவிக்கப்பட்ட வார்டு கவுன்சிலர் சுயம்புவை எதிர்த்து 60-வது வார்டு உறுப்பினரான பாலகுருசாமி போட்டியிட்டார். போட்டி எழுந்தபோது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் தலைமையால் அறிவிக்கப்பட்ட சுயம்புவையே தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் என மாநகராட்சி அலுவலகத்தின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 15 கவுன்சிலர்கள் அழைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 11 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
சுயம்பு, 2 வாக்குகள் பெற்றார். பாலகுருசாமி 9 வாக்குகள் பெற்று தெற்கு மண்டத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து தூத்துக்குடி தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம், ”தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகள்ல 52 வார்டுகள் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான அமைச்சர் கீதாஜீவனின் எல்லைக்குள்ளும், 8 வார்டுகள் தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் எல்கைக்குள்ளும் வருகின்றன. இதுல, 8 வார்டுகள்ல 55-வது வார்டுல ராஜதுரை, 56-வது வார்டுல சுயம்பு, 58-வது வார்டுல பச்சிராஜ் ஆகிய மூணு பேரும் தி.மு.க சார்புல போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஆனா, 2-வது வார்டுல சுப்புலெட்சுமிக்கும், 14-வது வார்டுல கீதாமுருகேசனுக்கும் அனிதா, சீட் கொடுக்கல.
இவங்க ரெண்டு பேருமே கீதாஜீவன் ஆதரவாளர்கள். ஆனா, சுப்புலெட்சுமியும், கீதா முருகேசனும் சுயேச்சையா நின்னு ஜெயிச்சுட்டாங்க. தெற்கு மண்டலத்துக்குபட்ட வார்டுகள்ல 3 பேரு மட்டும்தான் அனிதாவோட ஆதரவாளர்கள். ஆனா, தெற்கு மண்டலத் தலைவர் பதவிக்கு தன்னோட ஆதரவாளர் சுயம்புவின் பெயரை அறிவிக்க வச்சார். அனிதா ஆதரவாளர்கள் மூணு பேருல சுயம்புவுக்கு ஒரு ஓட்டுதான் விழுந்திருக்கு. அதே நேரத்துல தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலினப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டா, கீதாஜீவனோட விசுவாசியான பாலகுருசாமியை மேயராக்கிடலாம்னு கீதாஜீவன் தரப்பு கணக்குப் போட்டுச்சு. ஆனா, மேயர் பதவி பொதுபிரிவுக்கு ஒதுக்கப்பட்டதுனால, கனிமொழி மேடத்தோட ஆசியால ஜெகன் அண்ணனையே அக்கா மேயர் ஆக்கிட்டாங்க.
ஜெகன் அண்ணனோட ஆதரவாளரான நிர்மல்ராஜூக்கு துணை மேயர் பதவி ஆசை காட்டி முடியாமல் போக, மண்டலத் தலைவராக்கி ஆறுதல் அடையச் செஞ்ச மாதிரி, பாலகுருசாமிக்கு மேயர் ஆசையைக் காட்டிட்டதுனால மண்டலத் தலைவர் பதவி கொடுத்திடலாம்னுதான் கீதாஜீவன் தரப்பு நினைச்சுது. ஆனா, அனிதா அண்ணாச்சி `நாலு மண்டலத்துல ஒரு மண்டலத் தலைவர் பதவியயாவது தெற்கு மாவட்டத்துக்கு ஒதுக்குங்க’ன்னு சொல்லி கேட்டதுனால தலைமை தெற்கு மண்டலத்தை சுயம்புவுக்கு ஒதுக்குச்சு. பாலகுருசாமி ஜெயிச்சுட்டார். இது அனிதா அண்ணாச்சிக்கு ஒரு வகையில தோல்விதான்” என்றனர்.