நாட்டில் நாளாந்த மின்தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படலாம்! கொழும்பிலிருந்து எச்சரிக்கை



நாளாந்த மின்தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலைமை மற்றும் வரட்சியான காலநிலை என்பன காரணமாக, நாளாந்த மின் தடை 15 மணித்தியாலங்கள் வரை நீடிக்கக்கூடும்.

சிலநேரம் எதிர்காலத்தில் மின்துண்டிப்பு நேர அட்டவணைக்குப் பதிலாக, மின்விநியோக நேர அட்டவணையை வெளியிடுவது இலகுவானதாக இருக்கும்.

தற்போது வரையில், நீர் மின் உற்பத்தியில், சுமார் 1,200 மெகாவொட் மின்சாரத்தை வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றபோதிலும், நீர் இன்மையால், மதிய நேரத்தில் 300 மெகாவொட் மின்சாரத்தையும், இரவு நேரத்தில் 700 மெகாவொட் மின்சாரத்தையும் மாத்திரமே வழங்க முடியும்.

அதேநேரம், எரிபொருளில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையங்களில், 1,700 மெகாட் அளவில் கொள்ளளவு இருக்கின்ற போதிலும் எரிபொருள் இன்மையால் 1,000 மெகாவொட் மின்சாரத்தை மாத்திரமே வழங்க முடியும்.

ஆனால், இரவு நேரத்தில் மாத்திரம் 1,800 மெகாவொட் மின்சாரத்துக்கான கேள்வி உள்ளது. எனவே, விநியோகத்தில் நிச்சயமாக வீழ்ச்சி உள்ளது.

தற்போது வரையில், பாஜ் மின்னுற்பத்தி நிலையத்திற்கும், களனிதிஸ்ஸ கூட்டு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், 1,500 மெட்ரிக் டன் எரிபொருள் மாத்திரமே கிடைத்துள்ளது.

எரிபொருளில் இயங்கும் வேறு எந்தவொரு மின்னுற்பத்தி நிலையத்திற்கும், எரிபொருள் கிடைக்கவில்லை. இன்றையதினம் 10 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த நிலையில், வரும் நாட்களில், 12 மணித்தியாலங்களாகவும், 15 மணித்தியாலங்களாகவும் அதிகரிக்க வேண்டி ஏற்படக்கூடும். எனவே, மின்சாரம் விநியோகிக்கப்படும் நேரத்தைக் கூறுவது சிறந்ததாகும்.

விரைவாக எரிபொருளைப் பெற்றுக்கொடுத்தால், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை இயன்றளவு குறைக்க முடியும் என அரசாங்கத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.