நெல்லை மாநகராட்சிப் பள்ளியில் பயின்ற 7 மாணவிகளை நீட் தேர்வுக்கு பயிற்சி கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளாக மாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்களை மெடலும், ஷீல்டும் வழங்கி விஜய் மக்கள் இயக்கத்தினர் கெளரவித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் இந்த வருடம் தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி மருத்துவம் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு இதே கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 3 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி இருந்தனர். இந்த முறை தமிழக அரசு அறிவித்திருந்த 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கல்லணை பெண்கள் பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய மூவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், காயத்ரி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரிக்கும், சௌந்தர்யா கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கும், கிருத்திகா கோவையிலுள்ள பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரிக்கும், அப்ரின் பாத்திமா கோவை பல் மருத்துவக் கல்லூரிக்கும் தேர்வாகி தற்போது மருத்துவ படிப்பு பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விஜய் தொண்டர் அணியினர் கடந்த 2 வாரங்களாக வாரத்தில் ஒருநாள் ஒரு நிகழ்ச்சி என நடத்தி வருகிறார்கள். அதன்படி, முதல் வாரத்தில் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கினார்கள். இரண்டாவது வாரம் ஆயிரக்கணக்கான மஞ்சள் பைகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி, பாலீத்தின் பாதிப்பையும், மாற்றாக துணிப்பைகள் அவசியத்தையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தினர்.
இந்த வரிசையில், இந்தவாரம் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவிகளை தொடர்ச்சியாக வெற்றி பெறச் செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்க முடிவெடுத்தனர். அந்த அடிப்படையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பாடம் நடத்தும் 35 ஆசிரியர்களுக்கு விஜய் மக்கள் இயக்க தொண்டரணியினர் விருது வழங்கி, மெடலும் வழங்கி, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
”பொருளாதார ரீதியில் மிகவும் பின்னடைந்த குடும்பங்களைச் சார்ந்த மாணவிகள் பயிலும் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை 4865 மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஏழு மாணவிகளை அரசு மருத்துவப் படிப்பிற்கு தேர்வாக்கிய இந்த 35 ஆசிரியர்களை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கௌரவப்படுத்தி ஊக்கம் அளிக்கிறோம். இதனால், மேலும் அதிகமான எண்ணிக்கையில் அரசு பள்ளியில் இருந்து மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு செல்வதற்கு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமையும் என்ற நம்பிக்கையில் இதனை செய்திருக்கிறோம்” என்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சி பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு கூடுதல் ஊக்கம் தரும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM