நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய, ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை – 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல் என்ற திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்றைய தினம் (29) யாழ் நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன.
கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமை சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்கான ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத்திட்டத்திற்கமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யத்தக்க உணவுப் பயிர்களைக் பெற்று இறக்குமதிக்கான மாற்றீடுகளின் உள்ளூர் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு முதலிடம் வழங்கப்பட்டு, தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைப் புரட்சியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி ஆர்வமூட்டி, நேரடியாக பங்கேற்க நடவடிக்கை எடுக்கும் வகையில், ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வீடுகளைச் சுற்றி சுத்தமான சூழல் காணப்படும் நிலையில், நாளாந்த நுகர்வுக்கு தேவைப்படும் நச்சுத்தன்மையற்ற புதிய மரக்கறிகள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள், பழங்கள், பால், முட்டை போன்ற போசனை மிக்க உணவுகளை வீடுகளிலேயே பரஸ்பர குடும்ப அங்கத்தவர்களின் உதவிகளினூடாக பெற்று உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியமுள்ள தன்னிறைவு பெற்ற குடும்ப அலகுகளாலான மக்கள் தொகையை உருவாக்குவதே இந்த ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சமுர்த்தி நாற்று மேடைகளினால் உருவாக்கப்பட்ட மரக்கறிச் செடிகள் ( ஒரு வீட்டிற்கு 40 செடிகள் என்ற வகையில்) அந்த பிரிவின் பயனாளிகளுக்கு இயலுமான அளவு பகிர்ந்தளிப்பதற்கும், வீட்டுத் தோட்டம் தொடர்பாக ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற உள்ளீடுகள் ( தென்னங்கன்று, மருத்துவ மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள், சிறு ஏற்றுமதி செடிகள்) கிடைக்கின்ற ஒழுங்குமுறைகளுக்கமைய பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.