புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி ராஜேஷ் குமார் பேசியதாவது: ஜார்கண்ட் மாநிலத்தில் 10 பிரிவினர் எஸ்டி வகுப்பினராக மாற்றப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் தமிழகத்தில் நரிக்குறவர், குரும்பா பிரிவினரை பழங்குடியினர், பட்டியலின வகுப்பினராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. நரிக்குறவர், குரும்பா பிரிவினரை பட்டியலினத்துக்கு மாற்றி கல்வி, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கடந்த 1965ம் ஆண்டு முதல் கோரிக்கை இருக்கிறது. இதனை அடிப்படையாக கொண்டுதான் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, 1969ம் ஆண்டு இது சார்ந்த பரிந்துரையை கொடுத்தார். இதை பரிசீலனை செய்த லோகூர் கமிட்டியும், பழங்குடியினர் பிரிவினருக்கான தேசிய ஆணையமும் அதற்கு ஒப்புதல் வழங்கின. இது சார்ந்த செயல்திட்ட வரைவும் கடந்த 2016ம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இதை நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் சட்டமாக்க ஒன்றிய அரசு தவறி விட்டது. தற்போது அது காலாவதி ஆகிவிட்டது. இந்த விவகாரம் தற்போது அரசியலாக பார்க்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு நரிக்குறவர் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த பிரச்னைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அப்போதே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், அரசின் நலத்திட்டங்களை இவர்கள் பெறுவார்கள். நரிக்குறவர் சமூகத்தினரை தமிழக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு 2013ம் ஆண்டிலேயே இந்திய தலைமை பதிவாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார்,’ என்று தெரிவித்தார்.இவ்வாறு அவர் பேசினார்.