புதுடெல்லி: ‘இளைஞர்களின் கடின உழைப்பிற்கு மதிப்பளித்து, ஆயுதப்படை ஆட்சேர்ப்பில் ஏற்படும் தாமதத்திற்கு முடிவு கட்ட உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரியங்கா காந்தி கடிதம் எழுதி உள்ளார். தனது கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான தேர்வு நடத்தப்பட்டு, அதே மாதம் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. உடல் தகுதி உட்பட அனைத்து தேர்வுகளும் முடிக்கப்பட்டு, தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டும், இன்னும் சேர்க்கை பட்டியல் வெளியிடப்படவில்லை. சேர்க்கை பட்டியல் வெளியிடுவதற்கான தேதி மீண்டும், மீண்டும் நீட்டிக்கப்படுகிறது. இதே போல், விமானப்படை வீரர்களுக்கான மற்றொரு ஆட்சேர்ப்பு தேர்வு 2021 ஜூலையில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். அதன் முடிவுகள் ஆகஸ்ட் 2021ல் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் பாதுகாப்பு அமைச்சகம் அளித்த பதிலில் ஆயுதப்படையில் 1.25 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன. ஒருபுறம் ஆயுதப்படையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மறுபுறம் தேர்வு முடிவுகள் மற்றும் ஆட்சேர்ப்பு செயல்முறைகளில் தாமதம் நிலவுகிறது. இதனால், கடினமாக உழைத்த லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆயுதப்படையில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்ய வேண்டுமென்ற கனவுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் கடின உழைப்பிற்கு மதிப்பளித்து, ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்தை நிவர்த்தி செய்ய பாதுகாப்பு அமைச்சகம் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். * இஸ்ரேல் பிரதமர் பயணம் ரத்துஇஸ்ரேல் பிரதமர் நாப்தாலி பென்னெட் அடுத்த வாரம் இந்தியாவுக்கு பயணம் செய்ய இருந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ட்சுடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்தியா – இஸ்ரேல் இடையேயான உறவு 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இரு தரப்பு உறவின் அடிப்படை தூணாக பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைந்துள்ளது. சமீபகாலமாக ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்து வருகிறது,’ என்று கூறியுள்ளார்.