இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது.
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும்; மிதக்கும் தளமானது ஆண்டு தோறும் கப்பல் பழுதுபார்ப்பு வேலைகளுக்கு வெளியாருக்கு கொடுக்கப்படும் 600 மில்லியன் ரூபா செலவை மீதப்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டமானது 2015ஆம் ஆண்டு முதல் வரைவில் இருந்து வருகின்ற ஒன்றாகும்.
டோர்னியர் உளவு விமானமானது அடிப்படையில் கடல்சார் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும்,தேவையான பல்வேறு தளங்களுக்கு தகவல்களை வழங்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வசதி இன்மையே கடந்த இரண்டு வருட காலமாக இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் இருதரப்பு உரையாடல்களுக்கான காரணமாக அமைந்ததுடன் இலங்கைக்கு ஒரு டோர்னியர் உளவு விமானத்தை இலவசமாக வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இதற்கமைய, மேற்படி விமானம் உற்பத்தி செய்யப்படும் வரை அதேபோன்ற ஒரு விமானத்தை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும். இலங்கை விமானப்படையின் விமானிகளாலேயே இந்த விமானம் இயக்கப்படவுள்ளதுடன், இவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய பயிற்சிக்குழு ஒன்று இலங்கையில் தங்கியிருக்கும். இதன் காரணமாக இலங்கை விமானப் படையினர் மேற்படி விமானத்தை செலுத்தத் தேவையான மேலதிக திறனை பெற்றுக்கொள்ளவர். அதேவேளை, இந்த ஒப்பந்தங்கள் நாட்டின் கடல்சார் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த உதவியாக அமைவதுடன், பாரிய செலவையும் குறைக்க உதவியாக அமையவுள்ளது.
மேலும், இந்திய அரசாங்கத்தின் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் கொழும்பில் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (எம்ஆர்சிசி) ஒன்றை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாதிப்புக்குள்ளான கப்பல்களின் பாதுகாப்பை சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய உறுதிப்படுத்தவும், இப்பிராந்தியத்தியனுள் பாதிப்புக்குள்ளான கப்பல்கள் தொடர்பான தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கும் இம்மையமானது மிகவும் அவசியமானதாகும்.
இந்த நாட்டை சுற்றியுள்ள கடல் பிராந்தியத்தின் ஊடாக செல்லும் வணிகக் கப்பல்கள் தொடர்பில் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு இலங்கை கடற்படையைச் சாறும்.
சர்வதேச கடல்சார் அமைப்பின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக செயற்படும் வணிகக் கப்பல் செயலகம், வணிகக் கப்பல்களுக்கான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான பொறுப்பை இலங்கை கடற்படைக்கு வழங்கியுள்ளது. கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தனது கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கான பொறுப்பை 1,778,062.24 சதுர கிலோ மீற்றர் பரப்பிற்குள் கொண்டுள்ளது. இது இலங்கையின் நிலப்பரப்பை விட சுமார் 27 மடங்கு விசாலமானதாகும். இத்திட்டத்தின் முதன்மை பங்குதாரரான இலங்கை கடற்படை ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும். இந்தத் திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரம் 2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சினால் முதலில் சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட சம்பந்தப்பட்ட ஏனைய அரச நிறுவனங்களுக்கு உரிய முறையில் அனுப்பி அதற்கான உரிய நடைமுறைகளையும் பின்பற்றியுள்ளது.
எனவே, உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி மேம்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நன்மைகளைத் தவிர, ஒரு இறையாண்மையுள்ள நாடான இலங்கையின் தேசியப் பாதுகாப்பிற்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என பாதுகாப்பு அமைச்சு உறுதியளிக்கிறது.