புதுடில்லி: பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (மார்ச் 31) முடிவடைகிறது. ஆதாருடன் இணைக்காத பான் கார்டை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான முயற்சியில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை அரசு நீட்டித்தது. மார்ச் 31க்குள் இணைக்காவிட்டால் 2 பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அதன்பிறகு பான் கார்டு செயலிழந்துவிடும். கால அவகாசத்திற்குள் பான் – ஆதார் அட்டைகளை இணைக்காவிட்டால் வருமானவரித்துறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் செயலிழந்த பான் கார்டை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை, சொத்து வாங்குவது, விற்பனை செய்வது, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது உள்ளிட்டவை பாதிக்கப்படும். எனவே, பான் எண்ணுடன் ஆதாரை இணைத்த பிறகுதான் மேற்கண்ட சேவைகளை தொடர முடியும். இதனால், இதுவரை இணைக்காதவர்கள் நாளைக்குள் இணைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
எப்படி இணைப்பது
ஆதார் எண்ணுடன் பான்கார்டை இணைக்க முதலில் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar இந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பின் அந்த பக்கத்தில் ஆதார் எண் மற்றும் பான்கார்டு எண் மற்றும் பெயர் ஆகிய தகவல்களை பதிவிட வேண்டும். பின் கொடுக்கப்பட்ட சில தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். பின் லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் ஆதார் – பான்கார்டு இணைக்கப்படும். அதன்பிறகு ஹோம் பக்கத்திற்கு சென்று தகவல்கள் மூலம் ஆதாருடன் இணைக்கப்பட்டதா சரி பார்த்துக் கொள்ளலாம்.
Advertisement