பிரதமர் மோடி இன்று இலங்கையில் நடைபெறும் 5 வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளார்.
இந்தியா இலங்கை, வங்காள தேசம், மியான்மர், தாய்லாந்து நேபாளம் பூட்டான் ஆகிய ஏழு நாடுகளின் கூட்டமைப்பான பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இன்று கொழும்புவில் நிறைவு பெறுகிறது.
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் காணொலி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளனர்.
பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றுகிறார். கோவிட் ஏற்படுத்திய பொருளாதார சவால்கள், அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சி போன்ற முக்கிய விவகாரங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 28 ஆம் தேதி முதல் இலங்கையில் வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக புதிய பொருளாதார நெருக்கடிகள் உருவாகி இருப்பதை சுட்டிக் காட்டினார்.
தீவிரவாதம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏழு நாடுகளும் ஒருங்கிணைந்த செயல்திட்டங்களை உருவாக்கவும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
மாநாட்டுக்கு இடையே இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவில் இருக்கும் ஆதார் திட்டத்தைப் போல் இலங்கையில் டிஜிட்டல் அடையாள திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட 6 ஒப்பந்தங்களும் இரு நாடுளுக்கு இடையே கையெழுத்தாகின.