புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.
இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:-
அஸ்ட்ரா ஜெனேகா மற்றும் கோவிஷீல்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பற்றிய சர்வதேச தரவு, அவற்றின் நோய் எதிர்ப்புச்சக்தி அளவுகளில் 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.
கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில் பூஸ்டர் டோசுக்கு பிறகு சார்ஸ் கோவ்-2வுக்கு எதிராக நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து இருப்பதை காட்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பான ஒரு கேள்விக்கும்கூட, பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை கலந்து போடுவது பற்றி (முதல் டோஸ் கோவிஷீல்டு போட்டு விட்டு கோவேக்சினை இரண்டாவது டோசாக போட அல்லது முதல் டோஸ் கோவேக்சின் போட்டு விட்டு கோவிஷீல்டை இரண்டாவது டோசாக போட) 4-ம் கட்ட ஆய்வு நடத்துவதற்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியை பி.பி.வி.154 தடுப்பூசியுடன் ஒப்பிட்டு நோய் எதிர்ப்புச்சக்தி, பாதுகாப்பை ஆய்வு செய்யும் 2-வது கட்ட சோதனைக்கு பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை கலந்து போடுவது தொடர்பாக தேசிய தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்வதற்கு போதுமான அறிவியல் தரவு தேவைப்படுகிறது. தற்போது இது கிடைக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.