பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கட்சியுடனான கூட்டணியில் இருந்து எம்.க்யூ.எம்., கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான் கான், பிரதமர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லி.,யில் கடந்த 28-ல் தாக்கல் செய்யப்பட்டது.இதன் மீதான ஓட்டெடுப்பு ஏப்., 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 342 எம்.பி.,க்களில், 172 பேர் ஆதரவு இருந்தாலே இம்ரானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேறிவிடும்.

இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் பதவியில் இருந்து விலக நேரிடும்.ஏற்கனவே இம்ரான் கானுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் போர்க் கொடி துாக்கியுள்ளனர்.இந்நிலையில், இம்ரானின் தெஹ்ரிக் – இ — இன்சாப் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை எம்.க்யூ.எம்., கட்சி விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக எம்.க்யூ.எம்., அறிவித்துள்ளது. இதனால், இம்ரான் கட்சியின் பலம் 161 ஆக குறைந்தது.

அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்துஉள்ளது. ஏப்., 3ல் பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடக்கும் சூழலில் இம்ரான் கான் பதவி இழப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்நிலையில், இம்ரான் நாட்டு மக்களிடம் நேற்று மாலை உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப் பட்டது. அப்போது அவர் தன் ராஜினாமாவை அறிவிக்ககூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாக்., ராணுவ தளபதி மற்றும் உளவுப்பிரிவு தலைவர் ஆகியோரை இம்ரான் நேற்று சந்தித்து பேசிய பின், அவரின் உரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.