இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாக கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் அவர் எதிர்கொண்டுள்ள சவால்கள் என்னென்ன? அவர் கூறுவது போல் அரசைக் கவிழ்க்க வெளிநாட்டுச் சதி நடக்கிறதா? என்று அறிய முற்படுவோம்.
கட்சிக்குள் எதிர்ப்பு.. கடந்த சில ஆண்டுகளகாவே பாகிஸ்தானில் விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை என பிரச்சினைகளை அதிகரித்து வருகின்றன. இதற்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சிமுறையே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன். இந்நிலையில் இம்ரான் கானுக்கு சொந்த கட்சி எம்.பி.களே எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். ராஜா ரியாஸ், நுார் ஆலம் கான் உள்ளிட்ட 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதில் 24 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து என்ற நிலையில் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டிருந்தார் இம்ரான் கான்.
எதிர்கட்சியுடன் கைகோத்த கூட்டணி.. இந்நிலையில் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அதுமட்டுமல்லாமல் எத்ரிக்கட்சியுடன் கைகோத்து இம்ரானுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இது குறித்து பிபிபி (பாகிஸ்தான் மக்கள் கட்சி) கட்சியின் பிலாவல் பூட்டோ சர்தாரி தனது ட்விட்டர் பக்கத்தில், “எதிர்க்கட்சியும், எம்கியூஎம் கட்சியும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது. எம்கியூஎம் கட்சியின் ராம்டா கமிட்டி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மத்திய குழு இதற்கான உடன்படிக்கையை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் ஊடகத்தில் பகிரப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.
என்ன செய்ய நினைக்கிறார் இம்ரான் கான்? பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 2023ல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், தேர்தலை முன் கூட்டியே நடத்த வேண்டும் என்பது இம்ரானின் பிடிஐ கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரின் கோரிக்கையாக உள்ளது. இதுவரை கட்சி, கூட்டணிக் கட்சிகளிடமிருந்து உறுதியான சமிக்ஞைகள் ஏதும் கிடைக்காத நிலையில் ஆதரவாளர்களின் எண்ணிக்கையை தக்க வைக் இம்ரான் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆட்சியைத் தக்கவைத்து 2023ல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே அவரின் திட்டம். அதற்காக வழக்கமாக ஆசிய நாடுகளில் எழும் குற்றச்சாட்டு போல் அரசைக் கவிழ்க்க வெளிநாட்டு சதி என்ற குற்றச்சாட்டைக் கூற ஆரம்பித்துள்ளார் இம்ரான் கான்.
கைவிடும் கூட்டணிக் கட்சிகள்? இம்ரான் கான் தனது கட்சியின் பிரதான கூட்டாளிகளான பிஎம்எல்-கியூ PML-Q, பலோசிஸ்தான் அவாமி கட்சி Balochistan Awami Party (BAP), மற்றும் முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட்- பாகிஸ்தான் Muttahida Qaumi Movement-Pakistan ஆகிய கட்சியினருடன் தொடர்ந்து ஆலோசித்து வந்தார். இதில் பலோசிஸ்தான் அவாமி கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டு ஆளுங்கட்சிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எம்கியூஎம் கட்சியும் எந்த நேரத்திலும் ஆதரவை விலக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவில் ஆதரவை விலக்கியுள்ளது. அவர்கள் சிந்து மாகாண ஆளுநர் பதவியைக் கேட்டு இம்ரான் கானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னதாகவே பாகிஸ்தான் அரசு கவிழும் சூழல் உருவாகியுள்ளது.
இம்ரான் குறிப்பிடும் லண்டன் நபர் யார்? இதற்கிடையில், லண்டனில் அமர்ந்து கொண்டு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளர். அவருடைய பணம் உள்நாட்டில் சதி வேலைகளைச் செய்கிறது என்றும் இம்ரான் கூறினார். இஸ்லாமாபாத்தில், ‘நல்லதை ஊக்குவியுங்கள்’ என்ற தலைப்பில் அவர் பிரம்மாண்ட பேரணி மேற்கொண்டார். எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தைக் காட்டும் வகையில் அவர் இந்தப் பேரணியை மேற்கொண்டார். அப்போது அவர் நவாஸ் ஷெரீஃப் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆட்சியில் நீடிக்க 172 எம்.பி.க்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் இம்ரானுக்கான ஆதரவு 164 ஆகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பலன் 177 ஆக உயர்ந்துள்ளது.
இம்ரான் கானுக்கு வேறு வாய்ப்புள்ளதா? அரசு கவிழும் ஆபத்துள்ள நிலையில், 2023 வரை காத்திருக்காமல் ஆட்சியைக் கலைத்துவிட்டு உடனே தேர்தலை அறிவிக்குமாறு அவரது சகாக்கள் அவருக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர். ஆனால் மீண்டும் தேர்தல் நடத்தினால் இம்ரான் கான் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதில் நிலையற்ற தன்மையே நிலவுகிறது. ஆதலால் இம்ரான் கான் அரசியல் வாழ்வில் இது மிகப்பெரிய நெருக்கடியான தருணம் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.