போர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை| Dinamalar

கீவ் : ரஷ்யா – உக்ரைன் பிரதிநிதிகள் இடையே, இரண்டு வாரங்களுக்குப் பின் துருக்கியில் நடக்கும் பேச்சில் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில், உக்ரைனை எளிதாக வீழ்த்தி விடலாம் என்ற ரஷ்ய அதிபர் புடினின் திட்டம் நாளுக்கு நாள் பின்னடவை சந்தித்து வருகிறது. ரஷ்ய படைகளின் தொடர் ஏவுகணை தாக்குதலை உக்ரைன் படையினர் திறமையுடன் எதிர்கொண்டு வருகின்றனர். மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றை ரஷ்ய படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு தாக்கி அழித்தனர்.

உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலெய்வ் என்ற இடத்தில் ஒன்பது மாடி அரசு கட்டடத்தின் மீது நேற்று காலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. கட்டடத்தின் மையப்பகுதியில் மிகப் பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலதளங்களில் வெளியாகின.தாக்குதலுக்கு முன்பே பெரும்பாலான மக்கள் கட்டடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி நடப்பதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர்.

பிராந்திய கவர்னர் வைட்டாலி கிம் நேற்று பணிக்கு தாமதமாக வந்ததால் அவர் உயிர் தப்பியதாக தகவல்கள் கூறுகின்றன.போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா – உக்ரைன் பிரதிநிதிகள் இடையிலான அமைதி பேச்சு அண்டை நாடான பெலாரசில் நடந்தது. இதில் குறிப்பிட தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின், மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புலில் அமைதி குழுவினர் மீண்டும் நேற்று பேச்சை துவக்கினர்.இக்குழுவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நண்பரும், தொழிலதிபருமான ரோமன் அப்ரமோவிச் இடம் பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமாக குழுவில் இவர் இடம்பெறவில்லை என்றாலும், சில தொடர்புகளை ஏற்படுத்தி தருவார் என்ற அடிப்படையில், இருதரப்பும் இவருக்கு அனுமதி அளித்துள்ளன.

இந்த பேச்சு வாயிலாக போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் ரஷ்ய ராணுவ துணை அமைச்சர் அலெக்சாண்டர் போபின் வெளியிட்டுள்ள அறிக்கை இதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. அதன் விபரம்:சண்டையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கிலும் அமைதிப் பேச்சில் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹவ் நகரங்களில் தாக்குதல்களை குறைத்துக் கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

துருக்கியில் நடக்கும் பேச்சில் திருப்பம் ஏற்பட்டால், ரஷ்ய அதிபருக்கும், உக்ரைன் அதிபருக்கும் இடையே நேரடி பேச்சு நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.