தனது மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு பிரபலங்களை இயக்குனர் ஷங்கர் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி வருகின்றார்.
கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றப் படம் ‘ஜென்டில்மேன்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இதனைத் தொடர்ந்து, ‘காதலன்’, ’முதல்வன்’, ’இந்தியன்’, ’எந்திரன்’, ’அந்நியன்’ உள்பட பல வெற்றிப் படங்களை பிரம்மாண்ட முறையில் தந்து, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக தற்போது வலம் வருகிறார் இயக்குநர் ஷங்கர்.
இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியிருந்தார். அப்போது கொரோனா 2-வது அலை காரணமாக, திரையுலக பிரபலங்களை, இயக்குநர் ஷங்கர் அழைக்கவில்லை.
இதையடுத்து தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு இருப்பதால், மே 1-ம் தேதி, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த, இயக்குநர் ஷங்கரின் குடும்பம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து, இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றனர்.
இவரைத் தொடர்ந்து சினிமா துறையின் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, அழைப்பிதழ் வழங்கி, இயக்குநர் ஷங்கர் அழைத்து வருகிறார். ஷங்கரின் இளைய மகள் மருத்துவரான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இதேபோல், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கே.டி.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன் 2’ படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகர், இயக்குநர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இயக்குநர் ஷங்கருக்கும், கே.டி. குஞ்சுமோனுக்கும் இடையே, ஒரு படத்தை இயக்கியபோது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே, அடுத்தடுத்து அவர்கள் கூட்டணி இணைந்து படம் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுவந்தநிலையில், தற்போது தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரிடம், மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கி, ஆசி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.