சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு, வளமான தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சேதனைப் பசளை விநியோகம் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (28) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான சேதனப்பசளையினை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்கான உரத்தினை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விவசாய இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரணசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர் கம்பன்வில, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, இராணுவ அதிகாரிகள், மாகாண மற்றும் மாவட்ட விவசாய திணைக்கள பணிப்பாளர்கள், உரக்கூட்டுத்தாபன அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.