இளநிலை கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை அறிவியல் படிப்புகளில் சேர ஜூலை மாதம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும், பொது நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
மற்ற பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள் பொது நுழைவுத்தேர்வை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் மாநில கல்வி முறையை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
இந்த செயலைக் கண்டித்து, தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருவாரூரில் மதிமுக இளைஞரணி சார்பில் ஏப்ரல் 7ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.