மாட்டு டயர் வண்டி மோதி விபத்து – இருசக்கர வாகனத்தில் வந்த 8 மாத கர்ப்பிணி பலி

அருப்புக்கோட்டை அருகே டாட்டா ஏசி வாகனத்தில், மாட்டு டயர் வண்டியை கட்டி இழுத்துக் கொண்டு வந்தபோது, டயர் வண்டி கழன்று சாலையில் ஓடியதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 8 மாத கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள தீயனூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், விருதுநகரில் இருந்து தனது மனைவி கார்த்திசெல்வி மற்றும் தனது தாயார் லட்சுமியுடன் இருசக்கர வாகனத்தில், தனது சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். இதற்கிடையில் கிருஷ்ணாபுரம் தனியார் நூற்பாலை அருகே, டாட்டா ஏசி சரக்கு வாகனத்தின் பின்னால் டயர் வண்டியை கட்டி இழுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.
image
அப்போது டயர் வண்டி கழன்று, மணிகண்டன் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கரவாகனத்தில் பயணித்த மூவரும் பலத்த காயமடைந்தனர். தகவலின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்துவந்தது. 
பின்னர், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் இந்த விபத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண்ணான கார்த்தி செல்வியின் வயிற்றில் கம்பி குத்தியதில் ரத்தபோக்கு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
image
மேலும் காயமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகிய இருவரும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 8 மாத கர்ப்பிணி பெண் உடலை மீட்டு காரியாபட்டி போலீசார் பிரேதப்பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய டாட்டா ஏசி சரக்கு வாகன ஓட்டுநர் நவீன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.