மாநில உரிமைகளுக்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் நாளைய தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, வரி வருவாய், மழை, வெள்ள நிவாரணம் உள்ளிட்ட மாநில உரிமைகளை வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை ஏப்ரல் 2-ந் தேதி திறந்து வைக்கவுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், இந்த திறப்பு விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, நிர்மலா சீதாராமன், சோனியாகாந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோரும் பங்கேற்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஆன பிறகு முதன்முறையாக மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ஒரு சிலர் இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் அரசியலுக்காக வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.