ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் கடந்த 25-ம் தேதி வெளியானது ‘மூப்பில்லா தமிழே தாயே’ மியூசிக் சிங்கிள் ஆல்பம். தமிழின் பெருமைகளையும் தொன்மையையும் பேசும் இந்தப் பாடல் காணொலியாகவும் வெளியாகியுள்ளது. இதன் இசை மற்றும் வரிகளுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. மஹிந்திரா குழுமங்களின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுவும் தமிழில்.
ஆனந்த மஹிந்திராவின் ட்வீட்டில், “இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ.” என்று பகிர்ந்திருந்தார்.
அதற்கு பதில் ட்வீட் செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், “மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக `மூப்பில்லா தமிழ்’ இருக்கிறது என்றும் சொல்கிறோம்! மிக்க நன்றி!” எனப் பகிர்ந்திருக்கிறார்.
செக் நாட்டைச் சேர்ந்த ஜாவா பைக்கின் தென்கிழக்கு ஆசிய உரிமை மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் துபாய் கண்காட்சிக்கு சென்றிருந்த போது ரஹ்மானின் ‘பிர்தோஸ் ஸ்டூடியோ’வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பாடலின் காணொலியைப் பார்த்திருக்கிறார்.
ரஹ்மானின் ‘maajja’ லேபிள் சார்பில் இந்தப் பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், சைந்தவி, கதீஜா ரஹ்மான், பூவையார், நகுல் அப்யங்கர் உள்ளிட்ட பலர் பாடியுள்ளார்கள். பாடல் வெளியானது முதல் தற்போது வரை 22 இலட்சத்துக்கும் மேலான முறை யூ-ட்யூபில் பார்க்கப்பட்டிருக்கிறது.