பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மனிதர்களுக்கும் தொப்பைக்குமான தொடர்பு குறித்து நான் நிறைய நாட்கள் யோசித்ததுண்டு. தொப்பை இல்லாத நடுத்தர ஆண்களை இப்போதெல்லாம் பார்ப்பது குறிஞ்சி மலர் போல. எனக்கு என்ன ஒரு சின்ன பெருமை என்றால் தொப்பை இல்லாமல் நடுத்தர வயதை கடந்து வந்துவிட்டேன். பெரிதாக உடற்பயிற்சி செய்தது இல்லை, ஆனால் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் இரண்டு வேளை பத்தியம் இருந்து தொப்பை வராமல் பார்த்துக்கொள்வேன். இருப்பினும் தொப்பை இருப்பது ஒரு தனி அழகு.
பல மன்னர்களின் சிலைகளில் கூட செல்லமான தொப்பை இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்கள் பரம்பரையில் அனைவருக்கும் தொப்பை உண்டு. என் அப்பாவுக்கு தொப்பை இருந்ததில்லை, அலுவலகத்தின் ஆதர்ச நாயகனாக அவர் இருந்ததால் கடைசி வரை தொப்பை வராமல் பார்த்து கொண்டார். மிக பெரிய தொப்பை என்றால் அது என் பெரிய சித்தப்பாவுக்குத்தான் பெரிய வெண்ணை பானையை வயிறில் கட்டி தொங்க விட்டது போல இருக்கும்.
சின்ன வயசிலே பெரிய தொப்பை அவருக்கு என்றும் என் அம்மா சொல்வார். அதற்கு ஆதாரமாக என் சித்தப்பா தொப்பையில் என் பெரிய அக்கா உக்காந்திருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் இருக்கிறது. மற்றபடி என் இரண்டாவது அக்காவின் கணவருக்கு கல் தொப்பை, வளைகுடா நாடுகளில் பல வருடங்கள் இருந்ததால் நூற்றுக்கணக்கான கோழிகளையும் ஆடுகளையும் புசித்ததால் அவற்றின் மிச்சம் அவர் வயிற்றில் இன்னும் இருக்கிறது. அவரும் பல விதமான உடற்பயிற்சி செய்தும் உடம்பு வற்றியதே ஒழிய வயிறு வற்றிய பாடில்லை.
மூத்த அக்கா கணவருக்கு கொஞ்சம் மிருதுவான தொப்பை.. புகைப்படம் எடுக்கும்போது மட்டும் வயிற்றை எக்கி நின்று கொள்வரோழிய தொப்பை குறைய எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. நான் ஊருக்கு போகும்போது என்ன அத்தான் உங்க தொப்பை கொறஞ்சுருச்சு என்று ஐஸ் வைப்பதுண்டு… அப்போதுதான் வெளியே போகும்போதெல்லாம் நிறைய தின்பண்டம் வாங்கி வருவார். அண்ணன் தொப்பை கொஞ்சம் சிறியதுதான் ஆனால் உருண்டையாக அழகாக இருக்கும் அதை அண்ணி அவ்வப்போது வாஞ்சையுடன் எண்ணெய் மசாஜ் செய்வதை பார்த்திருக்கிறேன்.
என் நண்பர்கள் எல்லாருக்கும் தொப்பை உண்டு அதை தட்டி “ever pregnant never delivery ” என்று கிண்டல் அடிப்பேன். இப்பொதெல்லாம் காலேஜ் படிக்கும் இளைஞர்கள் பலருக்கு தொப்பை உள்ளது.
துபாயில் என் முதல் ரூம் மேட் மூர்த்தியும், சலீமும். மூர்த்தியின் தொப்பை ஸ்பெஷல் ரகம். வயிறு முழுக்க அப்படி ஒரு ரோம கட்டு. இரவு நேரத்தில் லைட் போடாமல் பார்த்தால் அவன் ஏதோ ஒரு கருப்பு கரடி பொம்மை கட்டி பிடித்து உறங்குவது போல் இருக்கும். சலீமின் தொப்பையோ எதிர்பதம் …முடியே இல்லாமல் பளபளக்க இருக்கும். அதுவும் வெள்ளி கிழமைகளில் ஆயில் பாத் எடுக்கும்போது மின்னும்.
தொப்பையை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே செய்துவிட்டேன். பல நண்பர்களிடத்தில் இதை பற்றி கேட்டு விட்டேன். ஒவ்வொருவனும் பெரிய விஞ்ஞானி அளவுக்கு விளக்கம் வேறு!!
“டேய் மாப்ள இந்த தொப்பை பிடிச்சு போய்த்தான் என் பொண்டாட்டி ஓகே சொன்னாளாம் எங்க கல்யாணத்துக்கு!!…”
“என் தொப்பை மேலதான்டா என் மகன் படுத்து தூங்குவான் அது வேற நான் கொறைச்சுட்டா பாவம் அவன் என்ன பண்ணுவான்!!
“டேய் என் பொண்டாட்டி சண்டை போட்டா, என் தொப்பை மேலதான் படுத்து அழுவா”….
இப்படி பல விதமான விளக்கங்கள்.. சரி இதுதான் இப்படி என்றால் பெரிய நிறுவனத்தால் மேலாளராக பணி புரியும் என் நண்பன் சிவா கொடுத்தது புதிய விளக்கம்…
“டேய் என் பெரிய தொப்பை பாத்துதான் இவன்தான் சீனியர் டைரக்டர் என்று முடிவு செய்தார்கள் என்று…”
நண்பர்களின் தொப்பையால் நமக்கு பல உபயோகம் உண்டு என்பதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். அழகான தொப்பை வைத்திருக்கும் என் நண்பனுடன் விமான பயணம் போவது மிக இனிமை.. அவன் தொப்பை மிருதுவான ரகம். மிடில் சீட்டில் உட்கார்ந்தான் என்றால் தொப்பை மீது நான் சாய்ந்து, எகானமி கிளாசில் குசன் கொடுக்கத்தார்க்கு பதில் உபயோகப்படுத்தி கொள்வேன்.
என் நண்பன் அறிவு பல முறை சொல்லுவான் “டேய் லூசு வளைகுடா நாட்டில் இருக்கும் நமக்குத்தான் இந்த மாதிரி தொப்பை அசைவம் சாப்பிடுவதால்… மற்றபடி அமெரிக்கா , கனடா போன்ற வெஸ்டர்ன் நாட்டில் இருக்கும் நம்மவர்களுக்கு இது மாதிரி கிடையாது , அங்கலாம் ஒழுங்கா எக்சசைஸ் பண்றங்கடா” என்று அடிச்சு விட்டான். அதை பிரேக் பண்ணுவதற்காவே வந்தது போல் வந்து இறங்கினர் என் அறிவு ஆசான் அந்த மேற்கத்திய நாட்டில் இருந்து. என்னுடைய யூனிவர்சிட்டி பேராசிரியர் அவர் இப்போது வெளிநாட்டில் குடியேறிவிட்டார் .. இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்தது போல ஒரு தொப்பை… இதற்கும் அவர் சுத்த சைவம்!
தொப்பைகளை பற்றி ஆராயச்சி செய்வதிலேயே என் வாழ்க்கை போய் விடுமோ என்ற பயம் சில சமயம் வந்ததுண்டு. யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் தொப்பை எந்த ரகம் என்று கண்டு பிடித்துவிடுவேன். வீட்டிற்கு எந்த விருந்தாளி வந்தாலும் நான் முதலில் கவனிப்பது தொப்பையைத்தான். சிலருக்கு ஆப்பிள் தொப்பை, சிலருக்கு பேரிக்காய் தொப்பை, மடிப்பு தொப்பை, பீர் தொப்பை, வெண்ணை பானை தொப்பை, சரிந்த தொப்பை, இரட்டை குழந்தை தொப்பை இப்படி ஒரு புதிய டிக்ஷனரியே உருவாக்கி விட்டேன். சில சமயம் தொட்டு பார்த்து கல் தொப்பையா இல்லை மென் ரகமா என்று உறுதி செய்வதும் உண்டு.
என் மாமாவின் நண்பர் மாரி அவர்களுக்கு தொப்பை கிடையாது. இதற்கும் அவர் சராசரி மனிதர்களை விட மூன்று மடங்கு அதிகம் சாப்பிடுவர். அவரை பார்க்கும் போதெல்லாம் என் மாமாவுக்கு கோபம் வரும், அந்த ஆளுக்கு “களவாணி வயிறுப்பா” என்று சொல்வர். தொப்பையில் இப்படி ஒரு ரகம் இருப்பது எனக்கு அப்போதுதான் தெரியும். இப்படியாக பலருடைய தொப்பை பற்றி ஆராய்ச்சி செய்து வாழ்க்கை போய் கொண்டிருக்கும்போதுதான் இடியாக அந்த சம்பவம் என் வாழ்க்கையிலும் நடந்தது.
லாக் டவுன் சமயத்தில் மதுரையில் என் ஊரில் இருந்தபோது தினமும் வைகை ஆற்றின் ஓரம் நடை பயிற்சி போவதுண்டு. ஒரு நாள் மழை பெய்தபோது வாக்கிங் போகும்போது தெரியாமல் ஒரு பள்ளத்தில் ஒரு கால் வழுக்கி விழ இடுப்பில் நல்ல அடி. வீட்டில் வந்து படுத்ததோடு சரி அண்ணண் மகன் சிபி ஒரு பக்கம் ஆயில் தேய்த்து விட .. ஒரு பக்கம் என் மனைவி எல்லா கை வைத்தியம் செய்ய.. அம்மா அமுக்கி விட இப்படி எல்லாருக்கும் லாக் டவுனில் என்னை வைத்து பொழுது போயிற்று.
மூன்று மாதம் வாக்கிங் போகவே இல்லை. லாக் டௌனை யார் அனுபவித்தார்களோ இல்லையோ எங்கள் குடும்பம் கூடி கும்மி அடித்தது. இரண்டு அக்கா குடும்பமும் வந்து விட அக்கா மாப்பிளைகளும் வெளி நாட்டில் இருந்து வர அண்ணன் சென்னையில் இருந்து வந்து விட எல்லா குடும்பமும் ஒன்றாக சேர்ந்து ஒரு சமையல்காரரை வைத்து விதம் விதமாக சமைத்து தின்று தீர்த்தோம். இப்படியாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போதுதான் ஒரு நாள் திடீரென்று என் வயிற்றை நான் பார்த்த பொழுதுதான் அது நன்கு பூரிப்படைந்து விம்மி புடைத்திருந்தது ..”வாவ் me too pregnant “… மெல்ல விம்மி புடைத்த வயிறை தடவி கொண்டேன்… அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை…” அதெல்லாம் தொப்பையெல்லாம் உங்களுக்கு இல்லை” என்று என் மனைவி தேற்றினாள். ஆனால் என் மகள் எடுத்த புகைப்படத்தில் என் தொப்பை தனியாக அழகாக உட்கார்ந்திருந்தது.
இடுப்பு சம்மந்தமாக டாக்டரை சந்தித்தபோது பரிசோதித்து விட்டு மெல்லமாக என் தொப்பையில் தட்டி விட்டு ஆப்பிள் தொப்பை என்று கிண்டலடித்தார் தொப்பையில் ஸ்டெதாஸ்கோப் வைத்திருந்த அந்த ஆர்த்தோ டாக்டர். ம்ம் என்ன செய்வது பல பேர் சாபம் விடுமா என்னை மட்டும். இப்போதெல்லாம் மற்றவர்கள் தொப்பை பற்றி வாய் திறப்பதே இல்லை. இப்படியாக மனைவி கொடுத்த பால் அல்வாவை ருசித்தவாரே என் தொப்பையை எப்படி குறைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்ன ஆனாலும் என் தமிழ் தொன்மை (தொப்பை ) பண்பாட்டை நானும் விட்டு கொடுக்க கூடாதல்லவா!!
–கெளதமன் நாகமுத்து
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.