உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரின் 34வது நாளான நேற்று, துருக்கி இஸ்தான்புல்லில் ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை குழுக்கள் போர்நிறுத்தம் தொடர்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது, துருக்கி அதிபர் எர்டோகன், “இரு தரப்பிலும் நியாயம் உள்ளது. உலகமே உங்களிடமிருந்து வரும் நல்ல செய்திக்காகக் காத்திருக்கிறது” என்று கூறியிருந்தார். மேலும், இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, “பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், உடன்பாடு மற்றும் ஒப்பந்தத்தின் இறுதி இலக்கை அடைவதற்கும், கீவ் மற்றும் செர்னிகிவ் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் ஃபோமின் நேற்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “உக்ரேனியர்கள் அப்பாவி மக்கள் அல்ல, இந்தப் போரில் நிறைய கற்றுக்கொண்டனர்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையிடமாக பென்டகன், “இது வெறும் இடம்பெயர்வு மட்டும் தான். கீவ்வுக்கான அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல” என்று எச்சரித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி(John Kirby), “கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது. இது வெறும் இடபெயர்வு மட்டும் தான். கீவ்வுக்கான அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. உக்ரைனின் பிற பகுதிகளுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைக் காண நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.