காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ‘உக்ரைன் அன்டோல்ட்’ எனப்படும் மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை டெல்லியில் நேற்று(செவ்வாய்) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியானது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு இடையே போர் தொடக்குவதற்கு முன்பு உக்ரைன் எப்படி இருந்தது என்பதன் பிரதிபலிப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் உரையாடலின் போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சசி தரூர் பதிலளித்தார்.
அப்போது பேசிய சசி தரூர், “ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தனது சொந்த நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததால், பேச்சுவார்த்தை நடத்துவதில் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான நேரத்தை இந்தியா கடந்துள்ளது. ரஷ்யர்கள் வருத்தப்படும் அளவுக்கு தனது முதல் அறிக்கையில் இந்தியா எதையும் கூறவில்லை என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் தொடர்ந்து ஐ.நா.வில் வாக்களிக்காமல் இருந்தபோது, எங்களது அடுத்தடுத்த அறிக்கைகளில், இந்தியாவின் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்துவதில் நாங்கள் இன்னும் கொஞ்சம் குரல் கொடுத்தோம். இந்தியா ரஷ்யாவுடன் ராணுவ உறவில் உள்ளது. மேலும், மேற்குலக நாடுகளுடனும் இந்தியா நட்புறவில் உள்ளது. எனவே அவர்களையும் எதிர்க்க முடியாது. இதுபோன்ற காரணங்களால் இந்தியாவின் நிலை கயிற்றில் ஆடுவது போல உள்ளது.” கூறினார்.