புதுடில்லி:ராணுவம் மற்றும் விமான படைகளுக்கு 3887 கோடி ரூபாய் செலவில் 15 இலகு ரக போர் ‘ஹெலிகாப்டர்’ கள் வாங்கப்பட உள்ளன.
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. இதில் உள்நாட்டில் அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமைச்சரவைக் கூட்டத்தில் 3887 கோடி ரூபாய்க்கு 15 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வாங்கவும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு 377 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.
பொதுத் துறையை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும். 10 ஹெலிகாப்டர்கள் விமான படைக்கும் 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திற்கும் ஒதுக்கப்படும். அனைத்து தட்பவெப்ப நிலையிலும் பறக்கும் ஆற்றல் உள்ள இந்த ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகள் எதிரிகளின் பதுங்கு குழிகளை அழிப்பது வனப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுப்பது உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படும். 55 சதவீத உள்நாட்டு பொருட்களில் தயாராகும் இந்த ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் வலுசேர்க்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement