லாகூர்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் நடைபெற உள்ளது.
இந்த விவாதத்தை தொடர்ந்து தீர்மானத்தின் மீது வரும் 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் இம்ரான்கான் அரசு கவிழும்.
இதற்கிடையில், இம்ரான்கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் (எம்கியூஎம்) கட்சி விலக்கிக்கொண்டு எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்தது. இதனால், நாடாளுமன்றத்தில் இம்ரான்கானின் உறுப்பினர்கள் பலம் 199-ல் இருந்து 164 ஆக குறைந்தது. மேலும், எம்கியூஎம் கட்சி எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்தது. இதனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக அதிகரித்தது.
இதன் மூலம் இம்ரான்கானின் அரசு கவிழ்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், தனது அரசை கவிழ்க்க பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் இம்ரான்கான் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், அரசு மீது நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் இம்ரான்கான் இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற திட்டமிட்டிருந்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இன்று இம்ரான்கான் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருந்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்பட்டது. ஆனால், நாட்டு மக்களுக்கு உரையாற்றும் நேரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளபதி உமர் ஜாவத் பாஜ்வா மற்றும் உளவுத்துறை தலைவர் நதீம் அஞ்சும் ஆகிய இருவரும் இம்ரான்கானை பிரதமர் இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ராணுவ தளபதி, உளவுத்துறை தலைவர் இருவரும் தன்னை சந்தித்த பின் இம்ரான்கான் தான் நாட்டு மக்களிடம் உரையாற்ற திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை இம்ரான்கான் திடீரென ரத்து செய்தார். இது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.