மும்பை: ரூ1.77 கோடி பணமோசடி வழக்கில் தொடர்புடைய பெண் பத்திரிகையாளர் மும்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார். லண்டன் தப்பிச் செல்ல முயன்ற போது அதிரடியாக அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பிரபல இந்திய பெண் பத்திரிகையாளர் ராணா அயூப் (37) சர்வதேச பத்திரிகைகளில் பணியாற்றி வருகிறார். இவர் பாஜக, மோடி, அமித்ஷா குறித்து எழுதிய புலனாய்வுக் கட்டுரைகள் மிகவும் பரபரப்பானவை.இந்நிலையில், தொண்டு என்ற பெயரில் இவர் பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியை பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது. பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள இவர், வரும் ஏப்ரல் 1ம் தேதி அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீசும் அனுப்பி இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு லண்டன் செல்வதற்காக மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு ராணா அயூப் வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த தகவலை ராணா அயூப்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘லண்டனுக்கு செல்ல முயன்ற என்னை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். லண்டனில் உள்ள பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையத்தில் பத்திரிகையாளர்கள் கொடுமைப்படுத்துவது குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றினேன். தற்போது இத்தாலியில் நடைபெற உள்ள பத்திரிகைத் துறை தொடர்பான கூட்டத்தில் உரையாற்ற உள்ளேன். விரைவில் அங்கு செல்ல வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் கூறுகையில், ‘லண்டனுக்கு தப்பிச் செல்வதற்காக ராணா அயூப் மும்பை சர்வதேச விமான நிலையம் வந்தார். அவரை குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்து வருகின்றனர். விரைவில் அவரிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தும்’ என்று தெரிவித்தனர்.