2019 மக்களவைத் தேர்தலின்போது காட்பாடியில் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்துக்கு நெருக்கமானவர்களாக கூறப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து ரூ. 11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினரின் சோதனையில் கைப்பற்றப்பட்டது. அதை 2019-20-ம் ஆண்டில் கதிர் ஆனந்தின் வருமானத்தில் சேர்த்த வருமான வரித்துறை அவரை வட்டியுடன் வரி செலுத்த வேண்டும் என்று கூறியது. மேலும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், ரூ. 11.48 கோடியை தனது வருமானத்தில் சேர்த்த வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து கதிர் ஆனந்த் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் இரண்டு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி சி.சரவணன், பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்று அவர் கூறியதை ஏற்க மறுத்துவிட்டார். வருமானவரித் துறை புலனாய்வாளர்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், முதல் பார்வையில், மனுதாரருக்கு எதிராக பெரும்பாலான ஆதாரங்கள் இருந்ததாக நீதிபதி கூறினார்.
மேலும், “அந்த பணம் மனுதாரருக்கு சொந்தமானது என்பதற்கான சூழ்நிலை அதிகமாக உள்ளது… பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் மனுதாரரின் துரைமுருகன் கல்வி அறக்கட்டளை நடத்தும் கல்லூரிகள் தொடர்பான சில ஆவணங்களும் கிடைத்திருப்பது அந்த பணம் அவருடையதுதான் என்பதைக் காட்டுகிறது. அந்த பணம் மனுதாரருக்கு சொந்தமானது, ஆனால், அது மனுதாரரால் வருமான வரியில் அவருடைய வருமானத்தில் வெளியிடப்படவில்லை” என்று நீதிபதி கூறினார்.
“கைப்பற்றப்பட்ட பணத்திற்கு சீனிவாசன் முன் வந்து, உரிமை கோருவதாக உறுதிமொழி அளித்ததால், வரி செலுத்துவதற்கான பொறுப்பை அவருக்கு மாற்ற முடியாது. எஸ். சீனிவாசன் வருமான வரித் தீர்வு ஆணையத்தின் முன் இந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காக விடுக்கும் கோரிக்கைகளும் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான தந்திரமாகத் தோன்றுகிறது” என்று நீதிபதி கூறினார்.
நீதிபதி இந்த மனுக்களை தள்ளுபடி செய்தபோதிலும், 30 நாட்களுக்குள் மேன்முறையீட்டு ஆணையர் முன், இந்த உத்தரவுக்கு எதிராக சட்டரீதியான மேல்முறையீடு செய்வதற்கு கதிர் ஆனந்த்துக்கு நீதிபதி அனுமதி அளித்தார். அதுவரை பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“