இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு விமானச் சேவையை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இந்தியா முழுவதும் பெரு நகரங்களுக்கு 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்காக ரூ.38,000 கோடி செலவில் டெல்லி ஜிவாரியிலும், அதே போல ரூ.17,000 கோடியில் மும்பையில் உள்ள நவி மும்பையிலும் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டுவருகிறது.
மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசிடம் இடத் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, தமிழ்நாடு அரசு 4 இடங்களைப் பரிந்துரைத்தது. அதில் இரண்டு இடங்கள் இறுதி செய்யப்பட்டு மாநில அரசுக்குத் தெரிவித்துள்ளோம். மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.