விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உட்பட தமிழகத்தின் ஏழு இடங்களில் புதிதாகத் தொல்லியல் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரத்தில் வெம்பக்கோட்டையில் முதலாம் கட்டக் கள ஆய்வுக்கான தொல்லியல் அகழாய்வுப் பணியினை தமிழகத் தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார்.
அதனடிப்படையில் வெம்பக்கோட்டை தொல்லியல் மேட்டில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்தன. தொல்லியல்மேட்டில் இரண்டு குழிகளுக்கு அளவீடு செய்யப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் 30 மீட்டர் ஆழத்தில் பழங்காலத்துப் பொருள்கள் கிடைக்கப்பெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய வண்ணப் பாசிமணிகள், கருமணிகள், சங்கு வளையல்கள், சங்கு அறுக்கப் பயன்படும் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள் எனப் பல இனங்களிலும் பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தொல்லியல் மேட்டில் தோண்டப்பட்ட முதல் குழி தற்போது 70 மீட்டர் ஆழம் வரை தோண்டி, பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது 100 மீட்டர் என்ற நிலையை எட்டும்போது தமிழர்களின் தொல்லியல் வரலாற்றை வலுப்படுத்தும் வகையில் மேலும் பல அரிய பொருள்கள் கண்டெடுக்கப்படலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 2-வது குழியில் 30 மீட்டர் ஆழத்தில் தற்போது பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தொல்லியல் மேட்டில் கிடைக்கப்பெற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு அவை யாவும் கால அளவைக் கண்டறிய பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்த கட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்கையில் உலக அளவில் தமிழர்களின் தொன்மையை எடுத்துக் காட்டும் விதமாக வெம்பக்கோட்டையில் பழங்காலப் பொருள்கள் கிடைக்கலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.