இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.
குற்ற விசாரணை திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தரகர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்களை டுபாய், ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளதுடன் பல பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
சுற்றுலா விசாவில் டுபாய் மற்றும் ஓமன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பெண்கள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதுடன், மசாஜ் நிலையங்கள், ஆட்கடத்தல், கடத்தல் போன்ற தொழில்களில் ஈடுபடுத்தும் தரகர்கள் லட்சக்கணக்கான சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.