சென்னை : ”வெளிநாட்டுப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.துபாய் மற்றும் அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு, தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். அவரை, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் முதல்வர் அளித்த பேட்டி:முதல்வரான பின் முதல் வெளிநாட்டு பயணமாக, துபாய், அபுதாபி சென்று வந்துள்ளேன். என் பயணம் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. துபாய் எப்படி ஒரு பிரமாண்டமான நாடாக உருவாகி இருக்கிறதோ, அதேபோல என் பயணமும், மிகப் பிரமாண்டமாக அமைந்தது.ஆறு தொழில் நிறுவனங்களுடன், 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதன் வழியே, 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப் போகிறது.துபாய் மற்றும் அபுதாபி சென்று, அந்த நாட்டின் முக்கிய துறைகளின் அமைச்சர்களையும், அரசு சார்ந்த அலுவலர்களையும், பெரிய தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் சந்தித்து உரையாடினேன்.வளர்ச்சிக்கு அடித்தளம்தமிழகத்தில் தொழில் முதலீடுக்கு ஏற்ற சூழல் இருப்பதை, தெளிவாக எடுத்து கூறினேன். இப்போது, ஆறு மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அடுத்தடுத்த மாதங்களில், இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.நான் சந்தித்த அனைவரையும், தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன். அவர்களின் வருகை தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஜவுளித்துறை, மருத்துவத்துறை, உணவு பதப்படுத்துதல், இரும்பு தளவாடங்கள் செய்தல் ஆகிய துறைகள், நிச்சயமாக வளர்ச்சி பெறும். அந்த வகையில், துபாய் பயணம் தமிழக வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை அமைத்துள்ளது. தொழில் வழிகாட்டி நிறுவனம் வழியே, இரு நாடுகளில் இருந்து, மேலும் முதலீடுகளை கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத்தான் இருந்தன. ஒப்பந்தம் போட்டதோடு சரி. நாங்கள் ஒப்பந்தம் போட்டுள்ளோம். சந்தேகம் இல்லைஅதை விட முக்கியமாக, அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன், அந்தத் தொழிலை துவங்கி, ஒரு நல்ல சூழலை உருவாக்கப் போகிறோம். துபாய், அபுதாபி வாழ் தமிழர்கள் தந்த வரவேற்பு, மிகவும் எழுச்சியோடு, உணர்ச்சியோடு இருந்தது.
இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் போனபோது தமிழகத்தின் உணர்வைத்தான் பெற்றேன். இது தமிழகமாக அல்லது துபாயா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது.தமிழகத்தில் தொழில் துவங்கினால், அனைத்து விதமான சலுகைகளும், முறையான வகையில் வழங்கி, தொழில் துவங்குவதற்கான சூழ்நிலையை நிச்சயமாக உருவாக்கித் தருவோம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளோம். அவர்களும் அந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.ஒரு குறிப்பிட்ட காலத்தை நிர்ணயம் செய்து, ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம். ஒப்பந்த தேதிக்கு முன், அந்தத் தொழிலை தமிழகத்திற்கு கொண்டு வந்து, நிச்சயமாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.வெளிநாட்டுப் பயணம் குறித்து, எதிர் கட்சிகள் கூறுவதைப்பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. தமிழக வளர்ச்சிக்காக, வேறு நாடுகளுக்கு செல்லும் சூழல் வந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்துவேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.