சென்னை ஆழ்வார் திருநகர் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் தீக்ஷித் பள்ளிவாகனம் ஏறி உயிரிழந்ததற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சென்னை , வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் விரிவு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் ஏழு வயது சிறுவன் தீக்ஷித் பள்ளி வளாகத்திற்குள்ளேயே பள்ளி வாகனம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தான் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். சிறுவனை இழந்து வாடும் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளி வளாகத்திற்குள்ளேயே விபத்து ஏற்படுகிறது என்றால் அதற்குக் காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்குதான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. பொதுவாக, தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஓய்வு வயது என்பது அதிகபட்சம் 60. இந்த நிலையில், கண் பார்வை முக்கியம் என்றிருக்கக்கூடிய ஓட்டுநர் பதவிக்கு 64 வயது உடைய நபரை பணியில் வைத்திருப்பது என்பது விதி மீறிய செயலாகும். மேலும் வாகனங்களிலிருந்து இறங்கும் மாணவ, மாணவிகளை வகுப்பறைக்குள் பத்திரமாக அனுப்பி வைக்கத் தேவையான நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனை மேற்கொண்டிருந்தால் சிறுவனின் உயிரிழப்பு தடுக்கப்பட்டு இருக்கும்.
சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதுபோன்ற விபத்துகள் எந்தப் பள்ளிகளிலும் நிகழாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் மேற்கொள்ள தெளிவான அறிவுரை வழங்கி, அந்த அறிவுரைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.