மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டியின் துவக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய கொல்கத்தா அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. 10 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களே சேர்த்திருந்தது. அதன்பின்னர் சற்று நேரம் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸல், ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சவுத்தி 1 ரன், உமேஷ் யாதவ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணி தரப்பில் ஹசரங்கா டி சில்வா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆகாஷ் தீப் 3 விக்கெட், ஹர்சல் பட்டேல் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது.