பெங்களூரு: ஹலால் உணவு பொருளாதார ஜிகாத் என்று கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. சி.டி.ரவி தெரிவித்திருக்கும் கருத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகத்தில் முஸ்லீம் ஓட்டல்களில் தயார் செய்யப்படும் ஹலால் உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக இந்து அமைப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலமாகா கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில். பாஜக தேசிய பொது செயலாளரும், கர்நாடக மணிலா சிக்க மங்களூரு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி ஹலால் இறைச்சி உணவை இந்துக்கள் பயன்படுத்த வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கும் போது அந்த உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லீம்கள் இந்துக்களிடம் இருந்து இறைச்சியை வாங்க மறுக்கும் போது, இந்துக்கள் மட்டும் ஏன் அவர்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்று அவர் வினவியுள்ளார். முஸ்லீம்கள் ஹலால் இல்லாத இறைச்சியை பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியை பயன்படுத்துவார்கள் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹச்.டி.குமாரசாமி, சி.டி.ரவி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மத நல்லிணக்க பூங்காவாக விளங்கும் கர்நாடகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று இந்து இளைஞர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.