சென்னை:
தமிழகத்தில் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளை ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி உள்ளார்.
செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் நெருங்கிவருவதால், அனைத்து பள்ளிகளிலும் அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்றும், மே 2ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடித்து மே 4ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு மதிப்பெண் விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.