சென்னை: தமிழகத்தில் தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில், வரும்கோடைகாலத்தில் இது 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மின்தேவையை சமாளிக்க தேவையானநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2.29 கோடி வீட்டு மின்இணைப்புகளும், 34 லட்சம் வர்த்தக இணைப்புகளும், 7.50 லட்சம் தொழிற்சாலைகளுக்கு குறைந்தழுத்த மின் இணைப்புகளும், 10 ஆயிரம் உயரழுத்த மின்இணைப்புகளும் உள்ளன.
குளிர்காலத்தில் தினசரி மின்தேவை 9 ஆயிரம் மெகாவாட் என்ற அளவிலும், கோடைகாலத்தில் தினசரி மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவிலும் இருக்கும். இந்நிலையில், தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட் என்ற புதிய உச்சத்தை நேற்று முன்தினம் எட்டியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: ஆண்டுக்கு 3 லட்சம் வீட்டு மின்இணைப்புகளும் 25 ஆயிரம் உயரழுத்த மின்இணைப்புகளும் புதிதாக வழங்கப்படுகின்றன. இதனால், ஆண்டொன்றுக்கு 500 முதல் 750 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்தேவை உள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டுகோடைகாலம் தொடக்கத்திலேயேதினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் தினசரி மின்தேவை 17,500 மெகாவாட்டில் இருந்து 18 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் எனகணிக்கப்பட்டுள்ளது. இதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்னுற்பத்திக்கான நிலக்கரி தேவையை பொருத்தவரை 72 ஆயிரம் டன் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு சுரங்கங்களில் இருந்து 50 ஆயிரம் டன்மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் 2 மாதத்துக்கு தேவையான 5லட்சம் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதன்மூலம்,ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இதைத்தவிர, நடுத்தர கால அடிப்படையில் 650 மெகாவாட் மின்சாரமும் குறுகிய கால அடிப்படையில் 750 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் தேசிய அனல்மின் கழகத்திடம் இருந்தும் 550 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். எனவே, தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட் அளவை எட்டினாலும், மின் தட்டுப்பாடு இன்றி எளிதில்பூர்த்தி செய்யமுடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின்தேவை கடந்த 2016 ஏப். 29-ம் தேதி தினசரி மின்தேவை 15,343 மெகாவாட்என்ற புதிய உச்சத்தை எட்டியது. பின்னர், 2017 ஏப்.19-ம் தேதி15,240 மெகாவாட்டும், 2019 மார்ச் 11-ம் தேதி 15,847 மெகாவாட்டும், அதே ஆண்டு ஏப்.3-ம் தேதி 16,151 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. 2021 மார்ச் 26-ம் தேதி 16,481 மெகாவாட்டும், அதே ஆண்டு ஏப்.10-ம் தேதி 16,846 மெகாவாட்டும், நடப்பாண்டில் மார்ச்28-ம் தேதி 17,106 மெ.வா. என்ற புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது. |