புதுடெல்லி:
தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் ‘கில்லாடி’ என கருதப்படும் பிரசாந்த் கிஷோர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இருந்தார். அங்கு சர்ச்சை ஏற்படவே அந்த கட்சியில் இருந்து விலகினார்.
பா.ஜனதாவுக்கு மாற்றாக பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகள் வெற்றி பெறுவதற்கு அவர் வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகங்கள் கைகொடுத்தன. ஆந்திரா, தமிழ்நாட்டில் அவரது திட்டங்களுக்கு வெற்றி கிடைத்தது.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பிறகு இனி வேறு எந்த கட்சிக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கப் போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்தார்.
தற்போது அவர் அரசியல் கட்சியில் சேர தீவிர கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட விரும்புகிறார். இதற்காக அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சோனியா, ராகுல் காந்தியை ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் சந்தித்து தனது முடிவை தெரிவித்துள்ளார். சோனியாவும் பிரசாந்த் கிஷோரை காங்கிரசில் சேர்க்க விரும்புவதாக தெரிகிறது. காங்கிரசில் இருந்து கொண்டே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு புதிய வியூகங்கள் வகுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
கடந்த முறை அவர் காங்கிரஸ் கட்சியில் சேர முயற்சி செய்தபோது, தனக்கு பொதுச் செயலாளர் (தேர்தல்) என்ற பதவியை உருவாக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சோனியா அதை ஏற்காததால் அவரால் காங்கிரசில் சேர இயலவில்லை.
இந்தநிலையில் தற்போது அவர் மீண்டும் காங்கிரசில் சேர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.