குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க பா.ஜனதா கட்சி இப்போதே தயாராகி விட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரைவில் அதிரடி பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளனர்.
இதற்கிடையே பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் தனது கவனத்தை திருப்பி உள்ளது. கர்நாடகாவிலும் காலடி எடுத்து வைக்க கெஜ்ரிவால் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது.
ஏற்கனவே வடமாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு ஓரளவு அதிகரித்துள்ளது. இது காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் மிகுந்த அதிருப்தியையும், சோர்வையும் கொடுத்துள்ளது.
ஆம் ஆத்மியின் புயல்வேக வளர்ச்சியை தடுத்தால் மட்டுமே தேசிய அரசியலில் அடுத்து மீண்டும் புத்துணர்ச்சி பெற முடியும் என்ற நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக ராகுல்காந்தி மாநிலம் வாரியாக தலைவர்களை அழைத்து பேசி வருகிறார். அதோடு தேர்தல் நெருங்கும் மாநிலங்களுக்கும் ராகுல்காந்தி மின்னல் வேக பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ராகுல் நாளை (வியாழக்கிழமை) கர்நாடகா செல்கிறார். கர்நாடகாவில் அவர் சித்தகங்கா மடாதிபதியை சந்தித்து பேச உள்ளார். இதன் மூலம் லிங்காயத் சமுதாய மக்களின் ஆதரவை காங்கிரஸ் பக்கம் கொண்டு வரமுடியும் என்று ராகுல் கருதுகிறார்.
மத்திய மந்திரி அமித்ஷா கர்நாடகாவுக்கு வந்து இந்த மடாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவருக்கு முன்னதாக ராகுல்காந்தி அந்த மடாதிபதியை சந்திப்பதன் மூலம் காங்கிரசுக்கு கணிசமான செல்வாக்கை பெற முடியும் என்று நம்புகிறார்.
இதேபோன்றுதான் குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களிலும் பா.ஜ.க., காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சில மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள இல்லாமல் உள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டியது உள்ளது.
இதுதொடர்பாக சோனியா ஆலோசனை தொடங்கி உள்ளார். எனவே விரைவில் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இதையும் படியுங்கள்… பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்