மும்பை: 83 வயதுடைய தனது தாய்க்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கும் நடிகரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளரும், உடற்பயிற்சி நிபுணருமான மிலிந்த் சோமன் (56) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் சைக்கிள் ஓட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 83 வயதான அவரது தாய்க்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். மேலும் அதில் அவர் கூறுகையில், ‘எனது தாயார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டார். உங்களுக்குப் பிடித்ததைச் செய்து கொண்டே இருங்கள். முறையான பயிற்சியுடன். 83 வயதிலும் அதனை செய்ய முடியும்’ என்று தெரிவித்துள்ளார். வழக்கம் போல், மிலிந்தின் இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலானோர் இவரது பதிவை பாராட்டினர். தாயும் மகனும் கடற்கரையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் இருவரின் படங்களும் வீடியோக்களும் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது.