ஸ்போர்ட்ஸ் பயோபிக் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் அந்தந்த நாயகர்களின் வெற்றி பெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் தான் திரைப்படங்களாக விரியும். அப்படி இல்லையெனில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நாயகர்களின் பயிற்சியாளர் குறித்த பயோபிக்காக விரியும். ஆனால், இரண்டு ஜாம்பவான்களின் தந்தை ஒருவர் அவர்களை இந்த நிலைக்குக் கொண்டு வர என்னென்ன செய்தார் என்கிற பயோபிக் என்பதுதான் ‘கிங் ரிச்சர்ட்’ மீதான ஆர்வம் பலருக்கும் ஏற்பட முக்கியக் காரணம். இன்னொன்று இதன் நாயகன் வில் ஸ்மித்!
“டென்னிஸ் நீங்க நினைக்குற மாதிரி ஒரு விளையாட்டு கிடையாது. அதை நல்லா கத்துக்க நிறைய வசதி வாய்ப்புகள் வேணும். டென்னிஸும் கிட்டத்தட்ட ஒரு வயலின் மாதிரிதான். அந்தக் கருவியைச் சரியா பிடிக்கவே அவ்வளவு வருஷம் ஆகும். நீங்க என்ன, உங்க வீட்டுல ரெண்டு மொஸார்ட் இருக்கற மாதிரி பேசறீங்க?” என்று கிங் ரிச்சர்ட் படத்தில் ஒரு வசனம் வரும்.
ஆம், உண்மையில் டென்னிஸ் என்பது பணக்காரர்களின் விளையாட்டு. ஒரு ஏழை வெள்ளை நிறத்தவருக்குக்கூட அதுதொட முடியாத தூரத்தில்தான் எப்போதும் இருந்தது. அப்படியிருக்கையில், ஆஃப்ரோ அமெரிக்கரான ரிச்சர்ட் எப்படி இதற்கெல்லாம் திட்டமிட்டார் என்பதை நினைத்தாலே வியப்பாகவே இருக்கிறது. தன் வீட்டில் வளர்ந்துவருவது டென்னிஸின் மொஸார்ட்கள் என்று உணர்ந்த ஒரு தகப்பனின் போராட்டமும், குழப்பங்கள் நிறைந்த ஈகோவும்தான் கிங் ரிச்சர்ட் படத்தின் கதை.
நம் தலைமுறையில் நாம் பெரிதும் பார்த்து வளர்ந்த அப்பாக்களின் பிரதிநிதிதான் ரிச்சர்டும். விளிம்புநிலைச் சமூகத்திலிருந்து வரும் ஒரு தந்தை, தனக்கு மறுக்கப்பட்ட உரிமைகளும், வசதி வாய்ப்புகளும் தன் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று, ஒவ்வொரு டென்னிஸ் பயிற்சியாளரிடம் சலிக்காமல் படியேறி வாய்ப்பு கேட்கிறார்.
வீனஸ் வில்லியம்ஸ் ஒரு போட்டியில் வென்ற செய்தியை வீட்டில் மகிழ்ச்சியாகப் படித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தொலைக்காட்சியில் கறுப்பினர் ஒருவர் அடித்துக்கொல்லப்படும் காட்சி வருகிறது. “இப்படி ஒரு பின்னணியிலிருந்து நீங்கள் இவ்வளவு சாதிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்று ஒருவர் கூறும்போது, “நீங்கள் பின்னணி பின்னணி என்று கூறுவது எங்கள் இனத்தைத்தான்” என்று உணர்த்துகிறார் ரிச்சர்ட். அந்தக் காட்சியில் கிங் ரிச்சர்டுடன் இணைந்து வில் ஸ்மித்தும் தான் இதுவரையில் நிறவெறி காரணமாக ஒதுக்கப்பட்ட தருணங்களுக்குச் சேர்த்து நடித்திருந்தார்.
டென்னிஸ் பார்க்கும் எல்லோருக்கும் வீனஸ், செரினா பற்றித் தெரியும். முப்பதுக்கும் மேற்பட்ட கிராண்ட் ஸ்லாம் சிங்கிள், 14 இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் என வில்லியம்ஸ் சகோதரிகள் டென்னிஸ் அரங்கிற்குள் செய்தது ஒரு யுகப் புரட்சி. ஆனால், இவை எல்லாவற்றையும் ‘மணி ஹெய்ஸ்ட் ப்ரொபசரைப்’ போல ஒவ்வொரு அங்குலமாக பிளான் செய்திருந்தார் வில்லியம். இரண்டு பெண் குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்பது முதல் எல்லாவற்றையும் பிளான் செய்திருக்கிறார். தன் வாழ்நாள் முழுக்க, தன்னுடையை ஈகோவுக்காக பிள்ளைகளை பலிகொடுத்தவர் எனப் பெயர் எடுத்த ஒரு நபரின் பயோபிக்கைப் பார்க்கும் போது பல இடங்களில் நம்மை அறியாமல் நம் கண்களை நனைத்துக் கொள்கிறோம். ரிச்சர்டுக்கும் ஈகோ உண்டுதான். ஆனால், அதில் ஒரு சமூகத்தின் மீதான ஏளனமும் புறக்கணிப்பும் நிரம்பி இருந்தன.
“என்னை ஏன் தொழில்முறை போட்டிகள் விளையாட விட மாட்டேங்குறீங்க?” என்று வீனஸ் வில்லியம்ஸ் பயிற்சி மையத்தில் நின்று அழுதுகொண்டே கேட்கும் அந்தத் தருணத்தில், ரிச்சர்ட் கூறுவது இதைத்தான்…
“சின்ன வயசுல என் அப்பாகூட நான் கடைக்குப் போனேன். அது ஒரு வெள்ளையரோட கடை. நான் குழந்தையா இருக்கற காலகட்டத்துல, நாம வெள்ளையரைத் தொட்டுப் பேசக் கூடாது. நான் அவருக்குக் காசு கொடுக்க போனப்போ, என் கை லேசா அவரு மேல பட்டுடுச்சு. அந்த வெள்ளையரும் அவரோட கூட்டாளிகளும் சேர்ந்து என்னை போட்டு அடிச்சு மிதிச்சாங்க. நான் என்னோட அப்பாவைத் தேடினேன். அவரு ஆனா, அந்த இடத்தை விட்டு ஓடிட்டு இருந்தாரு. அப்படிப்பட்ட அப்பாவா நான் இருக்கணும்ன்னு விரும்பல. என் குழந்தைகளுக்காக நான் நிற்கணும்ன்னு நினைக்கிறேன்” என்று கூறுவார் ரிச்சர்ட்.
தனக்கு நிகழ்ந்த எவ்வித வன்முறையும், நிறவெறியும் தன் குழந்தைகள் மீது படரவிடக்கூடாது என்று அதீத கவனத்தோடு கையாள்வதால், அவருடைய Intergenerational Trauma (அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப்படும் துன்பியல் உணர்வுகள்) தன்னுடைய குழந்தைகள் மீது நீண்டு செல்வதை ரிச்சர்ட் கவனிக்கத் தவறுகிறார்.
கொட்டும் மழையில் மகள்களுக்குப் பயிற்சி அளிப்பது ஒரு கட்டத்தில் சமூகத் துறைக்குப் புகாராகச் சென்று விசாரணையில் முடிய, “ஆம்! என் பிள்ளைகளிடம் நான் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்கிறேன். இந்த வீட்டில் மருத்துவர்களும், வழக்கறிஞர்களும், டென்னிஸ் நட்சத்திரங்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒருபோதும் அவர்களை (வன்முறை நிறைந்த) இந்த வீதிகளில் நான் இறக்கிவிட முடியாது. அதனால் நான் கண்டிப்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ரிச்சர்ட்.
ஆனால் ரிச்சர்டின் நியாயம் ஒரு புறம்தான். நாயக பிம்ப சரிதைப் படங்களில், மனைவியின் கதாபாத்திரத்தைவிட சோர்வான விஷயம் எதுவும் இருக்க முடியாது. அதிகபட்சம் ஏதோவொரு தருணத்தில் வெடித்துப் பேச வேண்டும். மற்றபடி எல்லாவற்றுக்கும் துணை நிற்கும் வேடமாகத்தான் மனைவி கதாபாத்திரங்கள் அமையும். ஆரஸீன் கதாபாத்திரத்துக்காக ஆரஸீனிடம் எடுக்கப்பட்ட பேட்டிகளை மீண்டும் மீண்டும் கேட்டுத் தன்னைத் தயார்படுத்தினார் ஔஞனூ எல்லிஸ் (Aunjanue Ellis). எப்படி நடக்கிறார், எப்படிப் பேசுகிறார் என்பதையெல்லாம் மீறி அகத்துக்குள் புழுங்கிக்கொண்டிருந்த ஒரு மனுஷியின் வலிகளை வார்த்தைகளாகத் திரையில் கொட்டியிருக்கிறார் எல்லிஸ். எல்லிஸ், ரிச்சர்டிடம் தன் மகள்களுக்காக நின்ற ஒவ்வொரு காட்சியையும், நம் வீடுகளில் நம்மால் பார்க்க முடியும். ரிச்சர்டின் கனவை முதலில் சுமந்தவர் ஆரஸீன்தான். செவிலியரான ஆரஸீன் தன் வேலை நேரம் போக, தன் மகள்களுக்காக டென்னிஸைக் கற்றுக்கொள்கிறார். ஒரு கோச்சாகும் அளவுக்குக் கற்றுக்கொள்ளுதல் லேசுபட்ட காரியம் இல்லை. ரிச்சர்டிடம் பாடம் பயின்ற வீனஸை விடவும், ஆரஸீனிடம் பாடம் பயின்ற செரினாதான் உலகின் மிகப்பெரிய டென்னிஸ் வீரர் என்பதை வரலாறு மறுக்காது.
“You are not the only dreamer in this house” என்று ரிச்சர்டிடம் பொட்டில் அடித்தாற்போலச் சொல்லும் ஆரஸீன், வீனஸிற்குத் தலைசிறந்த பயிற்சி வேறொரு இடத்தில் கிடைக்கும்போது, செரீனாவை முழுமையாக உருவாக்குகிறார். “உனக்காகத்தான் இங்க இத்தனை நாளா எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தேன்னு நினைச்சியா?” என வில்லியம்ஸிடம் ஆரஸீன் உரத்த குரலில் உடைந்துபோய் கேட்கும்போது உலகில் ஆணாதிக்க அடக்குமுறைக்கு உண்டான, உண்டாகிற எல்லா அம்மாக்களையும் கண் முன் நிறுத்திவிடுகிறார்.
தனக்கு நடந்த நிறவெறி வன்முறைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகரச் சொல்வது ரிச்சர்டின் முறை என்றால், Sojourner Truth எனும் பெண்ணுரிமைப் போராளியை முன்னிறுத்தி, “Remember who you are, remember where you come from” “You’re beautiful, Venus” என்று நெற்றியில் முத்தமிட்டுப் போட்டிக்கு வழியனுப்பவது ஆரஸீனின் வழியாக இருக்கிறது. அந்தப் போட்டியில் செரீனா கலந்து கொள்ளாமல் இருக்கும்போது, “You’re also beautiful, Serena” என்று அவரை அணைத்துக்கொள்வதும் அவ்வளவு அழகு.
ரிச்சர்டின் கதாபாத்திரத்தை பல இடங்களில் நம் தந்தையுடன் நம்மால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். ரிச்சர்ட் கதாபாத்திரத்தைவிடவும் வில் ஸ்மித் ‘பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினெஸ்’ஸில் நடித்த கார்ட்னர் கதாபாத்திரம் பலருக்கு நெருக்கமாக இருப்பதற்குக் காரணம், அதன் கதாபாத்திரனூடே இழைந்தோடும் மென்சோகம் தான். அதுவுமொரு நபரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான்.
வில்லின் முதல் ஆஸ்கர் பரிந்துரையான ‘அலி’, மொஹம்மது அலியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு. இப்படியாக எல்லாமே நிஜ மனிதர்கள் சார்ந்த கதைகள்தான் இதுவரையிலும் வில்லுக்குக் கைகொடுத்திருக்கிறது. ரிச்சர்டைப் போல பேசுவது, நடப்பது, சிரிப்பது என ரிச்சர்டாகவே மாறிப் போனார் வில் ஸ்மித். எல்லிஸுக்கு ஆரஸீனின் அகம் பிரதானம் என்றால், வில் ஸ்மித்துக்கு ரிச்சர்டின் வெளித்தோற்றம்.
50 வயதைக் கடந்து ஹாலிவுட்டில் எல்லாவற்றையும் வென்றெடுத்த பின்னர், வில்லுக்கு ‘கிங் ரிச்சர்ட்’ படத்துக்காக ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. டென்சல் வாஷிங்டனிடமும், விட்டேக்கரிடமும் இதற்கு முன்னர் ஆஸ்கர்களை விட்டுக்கொடுத்தவர் இந்த முறை வென்றிருக்கிறார்.
‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் வரும் பயிற்சியாளர்கள், மீடியாக்கள் எல்லோரும் ரிச்சர்டிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். “எப்படி இவ்வளவு உறுதியாக இருக்கிறீகள்? ஒருவேளை உங்கள் மகள்கள் சோபிக்கைவில்லை என்றால் என்ன செய்வது?” என்பார்கள். ரிச்சர்ட் சொல்வது ஒன்றே ஒன்றுதான். “இல்லை நான் எல்லாவற்றுக்கும் ஏற்கெனவே பிளான் செய்துவிட்டேன்” ரிச்சர்ட் தன் வாழ்க்கையில் இரு மகள்களை பெற்றெடுத்ததில் இருந்து, அவர்களை உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனைகள் ஆக்கியது வரை எல்லாமே அவரின் திட்டப்படிதான் நடந்தது. அதேபோல நிஜத்தில், வில் ஸ்மித் தன் வாழ்க்கையில் 27வது வயதில் ‘பேட் பாய்ஸ்’ நடித்ததிலிருந்து 50 வயதைக் கடந்து ‘கிங் ரிச்சர்ட்’ நடித்தது வரை எல்லாமே அவரின் திட்டமிடல்தான்.
அவர் திட்டமிடலை மீறி நடந்தவொரு விஷயம் என்றால் அது கிறிஸ் ராக் மீதான வன்முறைச் சம்பவம்தான். தன் குடும்பத்துக்காக நிற்பதுதான் ரிச்சர்ட், வில் இருவருமே தங்கள் வாழ்நாள் முழுக்க செய்தது. அதற்குத் தற்போது மன்னிப்பும் கேட்டிருக்கிறார் வில் ஸ்மித். மன்னிப்புக் குறிப்பில் வில் சொன்ன வரிகள் நம் எல்லோருக்குமானது.
“I am a work in progress” – நம் எல்லோருக்குமான வாழ்க்கைப் பாடம் அது.