அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் பயிலும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அவர்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு தடை ஏற்படாத வகையில் அங்கீகாரம் பெற்று, தொலைதூரக் கல்வி தொடர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழகப் பல்கலைக்கழகங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தொலைதூரக் கல்வியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் அனுமதியுடன் தொலைதூரக் கல்விக்கு அங்கீகாரம் உண்டு.
அதாவது இளம் வயதினர் முதல் முதியோர் வரை உள்ளவர்கள் நேரடி வகுப்புக்கு செல்ல முடியாத காரணத்தால் தொலைநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுவர்.
தமிழகத்தின் பழமை வாய்ந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும் உண்டு.
முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய பெருமை இப்பல்கலைக்கழகத்தின் தனிச்சிறப்பு.
இப்பல்கலைகழகம் இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வளாகத்தில் கலந்துகொள்ள முடியாத ஆனால் படிக்க விரும்பும் மக்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அந்த வகையில் பல்கலைக்கழகத்தின் மானியக்குழுவின் அனுமதியுடன் ஏற்கனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் 200 க்கும் மேற்பட்ட தொலைநிலைப் படிப்புகள் நடத்தப்பட்டது.
ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறாமல் தொலைநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருவதாகவும், இதனால் உயர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிக்கல் ஏற்படும் என்றும் தற்போது பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளில் சேர்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் பாதித்துவிடக்கூடாது.
தமிழகத்தில் இருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளில் சுமார் 40,000 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் தொடர்ந்து கிடைக்கவும், படித்துக்கொண்டிருப்பவர்களின் படிப்புக்கு பாதிப்பில்லை என்பதையும், தொடர்ந்து தொலைதூரக் கல்வியில் சேர விரும்புபவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதையும் உறுதி செய்துகொள்ள தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் கல்விப்பணி தொடர உதவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.