புதுடெல்லி: சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உள் இடஒதுக்கீடுகளை வழங்கக் கூடாது. எனவே, அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்யப்படுவதாக மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி கடந்தாண்டு பிப். 26ம் தேதி அப்போதைய அதிமுக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இது அரசியல் உள்நோக்கத்தோடு அவசர கதியில் உருவாக்கப்பட்டது. எனவே, இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அடங்கிய அமர்வு, ‘மாநில அரசுக்கு சாதி அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா? முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல் உள்இடஒதுக்கீட்டை வழங்கலாமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு அரசு தரப்பில் அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லாததால் வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கிய அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, பாமக உட்பட 11க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், 13 கேவியட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ‘வறுமை நிலையில் இருப்பவர்களை கைத்தூக்கிவிட உள்ஒதுக்கீடு தேவை. வன்னியர்குல சத்திரியர்கள் என்பது ஏழு பிரிவுகளை உள்ளடக்கியது. அதனால் வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தது சரியானதாகும்’ என்று பாமக சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராஜீவ் தவான், நாகமுத்து, விஜயன் முக்குலத்தோர் புலிப்படை தரப்பில் ஆஜரான சஞ்சய் விஷன், ராஜராஜன் ஆகியோர் வாதத்தில், ‘வன்னியர்களுக்கு 10.5சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு போதுமான வேலை, கல்வி போன்றவற்றில் உரிய வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள். தற்போது வழங்கியுள்ள இந்த உள்ஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் பிரிவு 14,15,16 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் படிப்பதற்கு கூடுதல் உதவிகளையோ அல்லது வசதிகளையோ செய்து தரலாம். ஆனால் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தவித வழிவகையும் இல்லை’ என தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக அஅரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் குமணன் வாதிடுகையில், ‘தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு என்பது 9வது அட்டவணையின் படி பாதுகாக்கப்பட்டுள்ளது. அதோடு 10.5% இட ஒதுக்கீட்டை ஒப்பிட முடியாது. அதனால் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. வன்னியர் சமுதாயம் தமிழகத்தில் அதிகமாக உள்ள பெரும்பான்மையான சமூகம். இதற்குள்ளாக பல உட்பிரிவுகளும் உள்ளன. எனவே, இந்த உள்ஒதுக்கீடு என்பது வெறும் வன்னியர்களுக்கு என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின்படி உள்ஒதுக்கீடு வழங்க முடியும். இதில் போதிய தரவுகள் இல்லை என்பதற்காக அதனை நிராகரிக்கக் கூடாது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது அந்த சமூகத்தின் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும். அதனால் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம் ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘எந்த ஒரு இட ஒதுக்கீடு விவகாரத்திலும் சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீடோ அல்லது உள் ஒதுக்கீடோ வழங்க முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. சாதிய உள் இடஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உள் இடஒதுக்கீடுகளை வழங்கக் கூடாது. அதில் மிகப்பெரிய அளவில் பாகுபாடு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான மற்றும் நியாயமான காரணங்களை அரசு தரப்பில் சொல்ல வேண்டும். முக்கியமாக இதுபோன்ற உள் இடஒதுக்கீட்டை வழங்கும் போது சரியான தரவுகள் இருக்க வேண்டும். ஆனால் வன்னியர்களுக்கு 10.5சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் தரவுகளே கிடையாது என்பதால் அதுதொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி முந்தைய உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது என தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.* சாதிய உள் இடஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. * வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. * சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உள் இடஒதுக்கீடுகளை வழங்கக் கூடாது. அதில் மிகப்பெரிய அளவில் பாகுபாடு ஏற்படும்.