சதிஸ்ரீநகர்-பாதுகாப்புப் படைகளின் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்துள்ள பயங்கரவாதிகள், வன்முறை செயல்களில் பெண்களை ஈடுபடுத்தும் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகமும், பாதுகாப்புப் படைகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதனால், கடந்த இரண்டு ஆண்டாக பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.ஜம்மு – காஷ்மீர், சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து முடிந்ததும், விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.பெட்ரோல் வெடிகுண்டுஇதையடுத்து, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், அமைதியைக் குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில், சோபுர் நகரில் பாதுகாப்புப் படையினர் மீது, பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரரும், உள்ளூர் போலீஸ்காரர் ஒரு வரும் காயமடைந்தனர்.இந்த தாக்குதல் குறித்து, அங்கிருந்த, ‘சிசிடிவி’ கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த காட்சியில் ‘பர்தா’ அணிந்த ஒரு பெண், இந்த வெடிகுண்டை வீசியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண், பாரமுல்லாவைச் சேர்ந்த ஹசினா அக்தர், 38, என்பது தெரியவந்துள்ளது. தொடர் விசாரணையில் அந்தப் பெண், தற்போது சிறையில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஆயிஷா அந்தராபியுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.தங்களுடைய பயங்கரவாத செயல்களுக்கு, உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தற்போது பெண்களையும் அதில் ஈடுபடுத்தியுள்ளது, பாதுகாப்புப் படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது போன்றவற்றில், உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது அவர்கள் பெண்களையும் இந்த செயல்களில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது தெரிகிறது. இதற்கு, பெண் என்பதால், பாதுகாப்புப் படையினர் அதிக சந்தேகப்பட மாட்டார்கள் என்பது தான் காரணம்.
தொடர் கண்காணிப்பு
இதற்கு முன்பும், பயங்கரவாதிகள் இதுபோல சில பெண்களை, தங்களுடைய முன்கள ஊழியர்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது, வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு, அவர்கள் பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். தப்பியோடிய அந்தப் பெண்ணை கைது செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.