வங்கி அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறுவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தவர் கௌரிசங்கர். இவர் கடந்த 2004ம் ஆண்டு வங்கி அலுவலக அறையில், அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக புகார் எழுந்தது. மேலும், அவர் பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்தார் என்றும் சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டினார் என்றும் வங்கியில் பிரச்னை செய்தார் என்றும் கௌரிசங்கர் 2006-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யபட்டார்.
பணி நீக்கம் செய்யப்பட்ட கௌரிசங்கர் வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம் கௌரி சங்கருக்கு மீண்டும் பணி வழங்க 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், தீர்ப்பாயட்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கௌரிசங்கரை வங்கி பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து கௌரிசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
கௌரிசங்கரின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய நிதித்துறையின் சுற்றறிக்கையின்படி, அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் எனக் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டி மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கௌரிசங்கருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர்.
வங்கி அலுவலக அறையில் அம்பேத்கர் படம் வைத்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது அரசு மற்றும் பொதுத் துறை ஊழியர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“