சென்னையின் அறிவுத் திருக்கோயில்களில் ஒன்றாக கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலையில் ஓங்கி உயர்ந்து நிற்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுகளில் ஒன்றாக உயிர்த்தெழுந்திருக்கிற இந்த நூலகம் கடந்த பத்தாண்டுகளில் பராமரிப்பின்றி சிதலமைடந்து பொலிவிழந்துபோனது. தற்போது மீண்டும் சுமார் 29 கோடி ரூபாய் செலவில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.
பிரதான சாலையில் இருந்து விலகி அகன்ற நுழைவாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்டமாக விரிந்துகிடக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். முகப்பில் பசுமை போர்த்தியிருக்க, நுழைவாயிலுக்கு முன்னால் கம்பீரமாக அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார் அண்ணா.
‘வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்’ என்று அவர் சொன்ன வாசகம் சிலைக்குக் கீழே பொருத்தமாகப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்திலிருந்து நூலகத்தை அண்ணாந்து பார்க்க அவ்வளவு வியப்பாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி, அவரின் பெயரை அழுத்தமாக நிறுவும் வகையில் உலகமே வியக்க இந்தக் கனவு நூலகத்தை உருவாக்கினார் கருணாநிதி. 2008, ஆகஸ்ட் 16-ம் தேதி இந்த நூலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
8 ஏக்கர் பரப்பளவில், 3.3 லட்சம் சதுர அடியில் 9 தளங்களாகத் திட்டமிடப்பட்ட இந்த நூலகத்தைப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர் சி.என்.ராகவேந்திரன் வடிவமைத்தார். வெகுவிரைவாக நடந்த இந்த நூலகத்தின் கட்டுமானப்பணி இரண்டே ஆண்டுகளில் நிறைவுற்றது. அண்ணாவின் 102வது பிறந்தநாளன்று இந்த நூலகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி.
அங்குலம் அங்குலமாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்த நூலகம், கடந்த பத்தாண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசு ஊழியர்களாகவும் ஆக்கியிருக்கிறது.
ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிஜ்ட் உள்பட உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் பதிப்பகங்கள், கல்வி நிறுவனங்களில் பதிப்பிக்கப்படும் அரிய நூல்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறது இந்த நூலகம். தமிழ் தவிர, மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, உருது, பிரெஞ்சு நூல்களுக்கும் தனித்தனி பகுதிகள் இந்த நூலகத்தில் உண்டு.
சுமார் 6 லட்சத்து 21 ஆயிரம் நூல்களைக் கொண்டுள்ள இந்த நூலகம், குழந்தைகள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் எனச் சமூகத்தின் எல்லாத் தரப்பு மக்களுக்குமான பொக்கிஷமாக இருக்கிறது.
ஒளியும் காற்றும் எத்திசையிலும் உள்ளே நுழையும் வகையில் அழகான கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட இந்த நூலகம் தரைத்தளத்துடன் சேர்த்து 9 தளங்களில் இயங்குகிறது. அதிகாலை 7 மணிக்கே நூலகத்தின் வாசல் மாணவர்களால் நிறைந்து விடுகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அதிகாலை டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்ற மாணவர்கள்தான் இருக்கையில் அமர்ந்து படிக்கமுடியும். டோக்கன் தீர்ந்தாலும் மாணவர்களை உள்ளே அனுமதிப்பார்கள். அவர்கள் கீழே அமர்ந்துதான் படிக்க முடியும்.
சீருடை அணிந்த பாதுகாவலர்களின் கண்காணிப்போடு இயங்கும் இந்த நூலகம் எவரும் தங்களுக்கான தளத்தையும் நூல்களையும் அடையாளம் காணும் வகையில் சிறப்புற நிர்வகிக்கப்படுகிறது.
தரைத்தளத்தின் முகப்பில் ஒரு தகவல் மையம் இயங்குகிறது. (044 22201011) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் இந்த தகவல் மையத்தில் நூல்கள் குறித்தும் நூலகம் குறித்தும் எல்லாத் தகவல்களையும் கேட்டுப் பெறமுடியும். தகவல் மையத்தை ஒட்டிய சிறு பாதையைக் கடந்தால் போட்டித்தேர்வு பிரிவு. அமைதி ததும்பும் அந்தப் பெரிய அறையில் தேர்வுகள் வாரியாக நூல்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு, யுபிஎஸ்சி தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வு, சட்டம், அறிவியல், மேலாண்மை போன்ற உயர்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கான 15,000 நூல்கள் இந்தப் பிரிவி்ல் உள்ளன. தவிர, இளநிலை முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான நூல்களையும் மத்திய மாநில அரசுகளின் பாடநூல்களையும் கூட இங்கே வாசிக்க முடியும். மாணவர்கள் தேடுகிற ஒரு நூல் இந்த நூலகத்தில் இல்லாமல் போனால், அடுத்த சில மணி நேரங்களில் வரவழைத்துக் கொடுத்துவிடுகிறார்கள் இங்கு பணியாற்றும் நூலகர்கள்.
இந்தப் போட்டித்தேர்வு பிரிவுக்கு எதிர்ப்புறம் வித்தியாசமான அறிவிப்புப் பலகை கவனத்தை ஈர்க்கிறது. மெய்ப்புல அறைக் கூவலர் பிரிவு. பார்வைச் சவால் கொண்டவர்களுக்கான பிரெய்லி நூலகம். இந்தப் பிரிவில் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்ட 1,500 நூல்கள், 145 மின் நூல்கள், 1,080 ஒலிப்புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை வாசித்துச் சொல்ல 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். பார்வைச்சவால் கொண்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பிரிவைப் பயன்படுத்திப் படித்து அரசுப் பணிக்குச் சென்றுள்ளார்கள்.
பார்வையற்றோருக்கான நூல் பிரிவை ஒட்டி சொந்த நூல் வாசிப்புப் பிரிவு இருக்கிறது. கிட்டத்தட்ட வகுப்பறையின் வடிவத்தில் இருக்கும் இந்தப் பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த நூல்களைக் கொண்டுவந்து இங்கு அமர்ந்து படிக்க முடியும். நோட்டுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை உரிய அனுமதியோடு இந்த அறைக்குக் கொண்டு வரலாம். மிக வசதியான இருக்கைகள் கொண்ட இந்த அறையில் நூலகம் மூடும் நேரம்வரை அமர்ந்து வசதியாக வாசிக்கலாம்.
தரைத் தளத்துடன் சேர்ந்து ஒன்பது தளங்களாக அமைந்த இந்தப் பிரமாண்ட நூலகத்தின் தளங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பிரிவுகளாக அமைந்திருக்கின்றன. அதன்படி, முதல் தளத்தின் ‘அ’ பகுதியில் அமைந்திருக்கிறது பருவ இதழ்கள் பிரிவு. 30-க்கும் மேற்பட்ட மொழிகளின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் இங்கு தருவிக்கப்பட்டிருக்கின்றன. 300-க்கும் அதிகமான இந்திய, வெளிநாட்டு இதழ்களும் இங்கு வருகின்றன. இப்பகுதியில் பெண்களுக்கேயான தனி வாசிப்பிடமும் இருக்கிறது.
4 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது குழந்தைகள் பிரிவு. முதல் தளத்தில் இங்கும் இந்தக் குழந்தைகள் பிரிவு 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 60 ஆயிரம் புத்தகங்களால் நிறைந்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள், ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் ஆகிய அயல்மொழிகளிலும் நூல்கள் இருக்கின்றன. செயற்கை மரம் ஒன்று மையத்தில் நிறுவப்பட்டிருக்க, சுவற்றில் கார்ட்டூன் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பது குழந்தைகளைக் கவர்ந்திழுக்கிறது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிடி, டிவிடி-க்களும் பல்வேறு தலைப்புகளில் இங்கு இருக்கின்றன. வாசிப்பு மட்டுமல்லாது கதை சொல்லல், மேஜிக் ஷோ போன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது இங்கு நடத்தப்படுகின்றன.
நூலகத்தின் இரண்டாம் தளம் செம்மொழியான தமிழ் மொழிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தமிழில் பதிப்பிக்கப்பட்ட அனைத்து நூல்களுமே இங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, நகைச்சுவை, கடிதங்கள், வாழ்க்கை வரலாறு, அறிவியல், புவியியல், வானியல், அறிவியல், மானுடவியல், உளவியல், கணினி அறிவியல், தத்துவம் எனப் பல்வேறு தலைப்புகளால் அமைந்த 2 லட்சத்துக்கும் அதிகமான நூல்களோடு இந்தப் பிரிவு அறிவுக் களஞ்சியமாகத் திகழ்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் படைப்புகளும், அவர்களைப் பற்றிய எழுத்துகளும் தனித்தனித் தொகுதிகளாக இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி நூல்களுக்கும் இங்கே பிரத்யேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியரின் படைப்புகளும், அவர் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் எழுதப்பட்ட விமர்சனங்களின் 40 தொகுதிகளும் இங்குள்ளன. இந்தியாவில் இந்தத் தொகுப்பு இடம்பெற்றுள்ள ஒரே நூலகம் இதுதான்.
பொது நூல்கள், கணினி அறிவியல், நூலகம் & தகவல் அறிவியல், புள்ளியியல், தத்துவம், உளவியல், அறம், மதம், சமூகவியல், அரசியல் அறிவியல் ஆகிய தலைப்புகளால் அமைந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்கள் மூன்றாம் தளத்தில் நிறைந்திருக்கின்றன.
உலகின் மிகச்சிறந்த பதிப்பகங்கள் பதிப்பித்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதிய அத்தனை ஆங்கில நூல்களும் இங்கே இருக்கின்றன. மாணவர்கள் தொடங்கி ஆராய்ச்சியாளர்கள் வரை எல்லாத் தரப்பினருக்கும் பயன்படும் அரிய பொக்கிஷங்கள் இவை.
நான்காம் தளத்தில் பொருளாதாரம், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, மொழி, மொழியியல், இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆகிய தலைப்புகளால் அமைந்த நூல்களைத் தாங்கியிருக்கிறது. உலகின் தலைசிறந்த நூலகங்களில் இடம்பெற்றிருக்கும் சர்வதேசச் சட்டங்கள் குறித்த, முக்கியத்துவம் வாய்ந்த நூல்களின் வரிசையும் இந்த நூலகத்தில் உண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் அவ்வப்போது இங்கு வந்து குறிப்புகள் எடுத்துச் செல்வதாகச் சொல்கிறார்கள் இத்தளத்தின் பொறுப்பாளர்கள்.
பொது அறிவியல், கணிதம், வானியல், இயற்பியல், வேதியியல், புவி அறிவியல் & புவியியல், தொல்லியல், விலங்கியல், தாவரவியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கான அரிய நூல்கள் ஐந்தாம் தளத்தில் நிறைந்திருக்க, ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை, வீடு & குடும்ப நிர்வாகம், நுண்கலை, கட்டிடக் கலை, புகைப்படக் கலை, இசை, விளையாட்டு ஆகிய தலைப்புகளால் அமைந்த நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. நுண்கலை, புகைப்படக் கலை, இசை சார்ந்த நூல்களின் தொகுப்புகள் அத்துறை சார்ந்த ஆர்வலர்களை வியக்க வைக்கும். உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்களின் பெரும்பாலான நூல்கள் இங்கே இருக்கின்றன. ஏழாம் தளத்தில் வரலாறு, புவியியல், பயணம், வாழ்க்கை வரலாற்று நூல்களுடன் உயர்கல்வி, போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களைக் கொண்ட மின்னூலகமும் அமைந்திருக்கிறது.
எட்டாம் தளத்தில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒன்பதாம் தளத்தில் நிர்வாகப்பிரிவும் கல்வித்தொலைக்காட்சியின் அலுவலகமும் இயங்குகிறது.
இந்த நூலகத்தில் உறுப்பினர்களாக இணையும் வசதியும் இருக்கிறது. உறுப்பினர்கள் பயன்படுத்த தனி அறைகளும் இருக்கின்றன. குடும்ப உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய். ஆண்டு சந்தா 250 ரூபாய். மாணவர்களுக்கான உறுப்பினர் கட்டணம் 150 ரூபாய். ஆண்டு சந்தா 75 ரூபாய். நூலகத்தின் மேல்தளங்களுக்குச் செல்ல விசாலமான லிப்ட் வசதிகள், நகரும் படிக்கட்டுகள் இருக்கின்றன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்ல பாதைகள், அவர்கள் உபயோகிக்கும் வகையில் கழிவறைகளும் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் ஆவின் பார்லர், தமிழக பாடநூல்கள் விற்பனை மையம் இயங்குகின்றன.
எந்தப் புத்தகம் எந்தத் தளத்தில், எந்த பிரிவில், எந்த அடுக்கில் உள்ளது என்பதை நொடியில் கண்டறியும் ‘ஒபக்’ எனப்படும் online public access catalogue என்ற தொழில்நுட்ப வசதியும் இந்நூலகத்தில் இருக்கிறது. லட்சக்கணக்கான நூல்கள் குவிந்திருக்கும் இந்த நூலகத்தில், நூல் அல்லது நூலாசிரியர் பெயரைக் கணினியில் குறிப்பிட்டு ஒரு நொடியில் புத்தகத்தின் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
தரைத்தளத்தில் 150 பேர் அமரும் விசாலமான அரங்கம் ஒன்று இருக்கிறது. அந்த அரங்குக்கு 7600 ரூபாய் வாடகை. 136 பேர் அமரும் வகையிலான நூல் வெளியீட்டரங்கம் ஒன்றும் இருக்கிறது. அதற்கான வாடகை 2700 ரூபாய். நூலகத்தை ஒட்டி வெளிப்புறத்தில் 1300 பேர் அமரும் பேரரங்கம் ஒன்றும் உண்டு. அதற்கு வாடகை 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். இவைதவிர திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உண்டு. அதில் 850 பேர் அமரலாம். அதற்கான வாடகை 83,000 ரூபாய்.
கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்புக்கான நிதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த நூலகத்தின் சுவர்கள், இருக்கைகள், படிக்கட்டுகள், மரச்சட்டங்கள், குடிநீர் குழாய்கள், கழிவறைகள் பழுதடைந்து சிதைந்துவிட்டன. அவற்றைப் புனரமைக்கவும், பழுதுகளை சரி செய்யவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் ரூபாய் 34 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அரங்கங்களும் மேம்படுத்தப்படுகின்றன. மென்பொருள் மற்றும் தொழில்நுட்பச் சாதனங்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகின்றன. அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புதிய தொகுப்பாக 6 லட்சம் புத்தகங்களை வாங்க 5 கோடி ரூபாயும் மின் புத்தகங்கள், மின் இதழ்கள் வாங்க 1.5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளன.
உலகின் அதிநவீன தொழில்நுட்பங்களோடு அரிய நூல்களையும் அற்புதமான சூழலையும் கொண்டிருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்னும் பல நூற்றாண்டுகள் தமிழ் சமூகத்துக்கு அறிவுச்சேவை ஆற்றட்டும்!