இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய் ஒன்றை கனேடிய தம்பதியர் தத்தெடுத்துள்ளார்கள்.
பொதுவாகவே இணையத்தில் நாய்கள் மற்றும் பூனைகள் தொடர்பான வீடியோக்களை விரும்புவோர் ஏராளம். அவ்வகையில் இந்தியாவில் தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாயை கனேடிய தம்பதியர் தத்தெடுத்த செய்தியும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்களைக் கவரும் விடயங்கள் என்னென்னவோ உள்ளன. ஆனால், Havilah Heger Wiley, Stephen தம்பதியரை ஒரு தெரு நாய் கவர்ந்துள்ளது.
அதை இந்தியாவிலேயே விட்டுச் செல்ல மனமில்லாமல் கனடாவுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் தம்பதியர். ஆனால், இந்தியாவிலிருந்து ஒரு நாயைத் தத்தெடுத்து அதை கனடாவுக்குக் கொண்டு வருவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஏராளமான ஆவணங்களை அவர்கள் நிரப்பவேண்டும்.
ஆவணங்கள் அனைத்தையும் நிரப்பிவிட்டு, தங்கள் நாய்க்காக பல மாதங்கள் காத்திருந்திருக்கிறார்கள் இருவரும். மூன்று நாட்கள் விமானப் பயணம், இரண்டு நாட்கள் இணைப்பு விமானத்துக்காக காத்திருந்து, மொத்தம் ஐந்து நாட்கள் பயணத்துக்குப் பின் அவர்களுடன் வீடு வந்து சேர்ந்துள்ளது இண்டி என பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்.
வெளியாகியுள்ள அந்த வீடியோவில், சர்வதேச விமான நிலையத்துக்குச் சென்று தங்கள் நாய்க்குட்டி விமானத்தில் வந்து சேருவதை எதிர்பார்த்து அந்த தம்பதியர் காத்திருப்பதையும், அந்த நாய்க்குட்டி வந்ததும் அவர்கள் மகிழ்ச்சியடைவதையும் காணலாம்.
முதலில் புதியவர்களைக் கண்டதும் சற்று தயங்கும் அந்த நாய்க்குட்டி, பிறகு ஆவலுடன் அவர்களுடன் விளையாடத் துவங்குகிறது.
இந்த வீடியோவை, 2.69 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளார்கள். அத்துடன் அந்த தெருநாயைத் தத்தெடுத்த தம்பதியரை பலரும் மனதார பாராட்டியும் வருகிறார்கள்.