இன்று கடைசி நாள்: பான்-ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

சென்னை:

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வழங்கப்பட்டுள்ளது.

இந்த பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே நேரத்தில் பலர் அதில் கவனம் செலுத்தவில்லை.

இதையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை வருமானவரி துறையினர் நீட்டித்துக்கொண்டே சென்றனர். மார்ச் 31-ந்தேதிக்குள் (இன்றுடன்) பான்-ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அது போன்று இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் இந்த இணைப்புக்கு மேலும் காலக்கெடு விதிக்கப்படும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் வருமான வரித்துறையின் உயரிய அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று மாலை இதுதொடர்பாக வெளிட்ட அறிக்கையில் இன்றுடன் பான்-ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் எண் செயல் இழந்துவிடும் என்றும், ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதிக்குள் இணைப்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இணைத்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி துறையினரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பான்-ஆதார் எண்னை இணைப்பதற்கு இன்று பலர் இணையதளங்களை நாடினர். பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? என்கிற கேள்வியும் பலரது மத்தியில் நிலவி வருகிறது. 2 கார்டுகளையும் இணைப்பது எப்படி? என்று பார்க்கலாம்.

வருமான வரித்துறை இணையதளமான https://www.incometaxindiaefiling.gov.in/home-க்குள் முதலில் நுழைய வேண்டும். பின்னர் இடது பக்கத்தில் இருக்கும் ‘லிங் ஆதார்’ லிங்கை கிளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு புதிதாக ஒரு பக்கம் வரும். அதில் உள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை பதிவு செய்ய வேண்டும். 2-வது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

3-வது கட்டத்தில் ஆதாரில் உங்களது பெயர் எப்படி உள்ளதோ அதனை அப்படியே பதிவிட வேண்டும். இதன் பின்னர் அதில் இடம்பெற்றுள்ள கேப்சா கோடை நிரப்ப வேண்டும்.

பார்வையற்றவர்களின் வசதிக்காக கேப்சா கோடிற்கு பதிலாக ஒன் டைம் பாஸ்வேர்டு ஓ.டி.பி. வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைன் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம். இதனை நிரப்பிவிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.

புதிதாக பான்கார்டு வாங்குபவர்களுக்கு ஆதார் எண்ணை அதனுடன் இணைத்தே பான்கார்டு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.