பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் செலாவணியினைக் கொள்வனவு செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்பது பற்றியும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மீறப்பட்டுள்ளமை பற்றியும் அவதானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய, மத்திய வங்கி, பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை 2022.03.31 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தத் தீர்மானித்திருக்கிறது.
பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் 2022.03.31 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநரரொருவராக நாணய மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இனிமேல் அனுமதிக்கப்படமாட்டாது என்பது பற்றி பொதுமக்களுக்கு இத்தால் அறியத்தரப்படுகிறது. இடைநிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டுடன் செய்யப்படும் ஏதேனும் கொடுக்கல்வாங்கல்கள் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்திற்கு மாறானது எனக் கருதப்படும் என்பது பற்றியும் பொதுமக்களுக்கு இத்தால் அறிவிக்கப்படுகிறது.
இலங்கை மத்திய வங்கி அதன் தலத்திலான புலனாய்வுகளை அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்று நிலையங்களில் தீவிரப்படுத்தியுள்ளதுடன் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகளுக்கு இணங்கியொழுகாத அதிகாரமளிக்கப்பட்ட நாணய மாற்றுநர்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துவதற்குÆ இரத்துச் செய்வதற்கும் தயாராகவுமுள்ளது.