பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், [email protected]க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மனித குலத்துக்கு சாதி தேவையில்லை, அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது. எனினும், உடனடியாக அது இயலாது. மேலும், இன்றைய அதி நவீன காலத்திலும் சாதியம் நிலவுவது மட்டுமன்றி, சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த நிலையை விட அதிகமாக ஆகியிருப்பதும் வேதனைக்குரியது.
இது தொடர்பாக சிந்திக்கவும், பேசவும் ஏராளமாக உள்ளன. அவை ஒரு புறம் இருக்க, உயர் சாதி என்னும் சொல்லைப் பற்றி மட்டும் இப்போது கவனப்படுத்த விரும்புகிறேன்.
முந்தைய கால மக்களிடையே உயர் சாதி, தாழ்ந்த சாதி என்ற கருத்தும், கண்ணோட்டமுமே இருந்தன. அதனால் அவ்வாறே பேசுவதும், எழுதுவதும் வழக்கமாக இருந்தது. கடந்த நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சிந்தனாவாதத்தின் விளைவாக, தாழ்ந்த ஜாதி என்னும் சொற்றொடர் புறக்கணிக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட சாதி என்னும் சரியான சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது.
தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடும்போது, அவர்கள் தாழ்ந்தவர்கள் என ஒப்புக்கொள்ளாமல், உயர்வு – தாழ்வை ஏற்காமல், ஒரு தரப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் அவர்கள் என்றே பொருள்படுகிறது. அதற்காகவே அந்த சொற்றொடர் உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பதமாக உள்ள உயர் சாதி என்னும் சொல், அப்படியேதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது தவறு அல்லவா!
உயர் ஜாதி என்று குறிப்பிடும்போது, ஜாதியின் உயர்வு தாழ்வை ஏற்பதாகவே ஆகும். எனவே, அந்த சொற்றொடரையும் உயர்த்தப்பட்ட ஜாதி எனத் திருத்திக்கொள்வது அவசியம்.
கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு இது கவனத்துக்கு வந்தது. அது முதல் எனது சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றில் – ஆசிரியர் கூற்றாக வரும் இடங்களில் – உயர் சாதி, மேல் சாதி ஆகிய சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், உயர்த்தப்பட்ட ஜாதி என்றே எழுதுகிறேன். கதைகளில் கதாபாத்திரங்களின் கூற்றாக இடம் பெறும் பேச்சுகள், அவர்களின் கோணத்தில் இடம் பெறும் வர்ணனைகள் என்றால் மட்டுமே, அவர்களின் இயல்புப்படி, மேல் ஜாதி அல்லது உயர் ஜாதி என்று குறிப்பிடுவேன்.
உங்களுக்கும் இதில் உடன்பாடு இருக்கும் என நம்புகிறேன். எனவே, இனிமேல் நீங்களும் உயர் சாதி என்று குறிப்பிடாமல், உயர்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
–ஷாராஜ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.