வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க மற்றும் தடுக்க மாற்று எரிபொருளைப் பயன்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார், எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை ஏறுமுகத்தில் இருக்கிறது. தற்போது ஹைட்ரஜனால் இயங்கும் எலக்ட்ரிக் காரும் அறிமுகமாகியுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த ஹைட்ரஜன் காரில் நேற்று (மார்ச் 30) பார்லிமென்ட் வந்தடைந்தார். அதன்பிறகு இந்த கார் பற்றியே அனைவரின் தேடலும் இருந்து வருகிறது.
ஹைட்ரஜன் எரிபொருளானது மாசுகளை வெளியிடாத தூய்மையான எரிபொருளாகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உதவியோடு, நீரிலிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களையும் ஆக்சிஜன் அணுக்களையும் பிரிப்பதன் மூலம் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு எரிபொருளின் செயல்பாடும் அதன் கிராவிமெட்ரிக் டென்சிட்டி திறன் கொண்டு கணக்கீடு செய்யப்படுகிறது. அந்தவகையில், டீசல், காஸ் போன்ற எரிபொருள்களுடன் ஹைட்ரஜனை ஒப்பிடுகையில், அதன் திறன் 3 மடங்கு அதிகம் ஆகும். அதாவது, இதன் கிராவிமெட்ரிக் டென்சிட்டி என்பது 120 எம்ஜே/கேஜி ஆகும்.
இந்தியாவில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், முதன் முறையாக ஹைட்ரஜனால் இயங்கும் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஹைட்ரஜன் எலக்ட்ரிக் காருக்கு ‛டொயோட்டா மிராய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜப்பானிய மொழியில் ‛மிராய்’ என்ற சொல்லுக்கு ‛எதிர்காலம்’ என்று பொருள். இதில் ஹைட்ரஜன் வாயுவை நிரப்ப 3 முதல் 5 நிமிடங்கள் வரைதான் ஆகும். இந்த கார், ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தி, செல் பேட்டரிகள் மூலம் இயங்குகிறது. காரை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு, ஐந்து நிமிடம் தான் ஆகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 650 கிமீ தூரம் வரை செல்லலாம்.
இவ்வளவு வசதியான இந்த ஹைட்ரஜன் கார் இந்தியாவில் இப்போது தான் அறிமுகமாகியுள்ள நிலையில், மக்களின் வரவேற்பை பொறுத்து பல நிறுவனங்களும் இந்தியாவில் ஹைட்ரஜன் காரை உற்பத்தி செய்து விற்க முன்வருவர். அப்படி ஹைட்ரஜன் கார்கள் சந்தையில் கிடைக்கப்பெறும்போது, நிறுவனங்களின் போட்டி காரணமாக விலை குறையலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் கார்கள் கலக்கப்போவது நிச்சயம்.
Advertisement